முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம்
புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.
மகாளய அமாவாசை
புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது. மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. ஆடி, தை அமாவாசைகளில் திதி கொடுக்காதவர்கள் புரட்டாசி மாதத்தில் மகாளய அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுப்பார்கள். இந்த நிலையில் புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் பலர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து நீர் நிலைகளில் புனித நீராடினர்.
பல்லவன் குளக்கரை
புதுக்கோட்டையில் பல்லவன் குளக்கரையில் முன்னோர்களுக்கு பலர் தர்ப்பணம் கொடுத்தனர். இதற்காக அமைக்கப்பட்டுள்ள இடத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. புரோகிதர்கள் குறைவானவர்களே இருந்தனர். இதனால் ஒரே நேரத்தில் பலரையும் வரிசையாக அமர வைத்து புரோகிதர்கள் வேத மந்திரங்களை ஓதி, மறைந்த முன்னோர்களின் பெயர், நட்சத்திரங்களை கூறி தர்ப்பணத்திற்கான நடைமுறைகளை செய்தனர். பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்த பின் சாந்தநாத சாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதேபோல மகாளய அமாவாசையையொட்டி கோவில்களிலும் பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
திருவரங்குளம்
திருவரங்குளம் அருகே காசிக்கு வீச கூட என்று அழைக்கப்படும் திருவுடையார்பட்டி திருமூலநாதர் திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் வெள்ளாற்று கரையில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.