பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்
பாவூர்சத்திரம் அருகே பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே மாடியனூர், சந்தனகுமார்பட்டி ஆகிய பகுதியினரிடையே ஊர் பெயர் பலகை வைப்பது தொடர்பாக கடந்த சில மாதங்களாக பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பாக தாசில்தார் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் சமாதான கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் அரசு அனுமதியின்றி பெயர் பலகை வைக்கக்கூடாது என முடிவு எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் சந்தனகுமார்பட்டியில் ஒருவர் பெயர்பலகையை வைத்ததாக கூறப்படுகிறது. இதை அகற்றக்கோரி சந்தனகுமார்பட்டியைச் சேர்ந்த பொதுமக்கள் 40-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து தென்காசி தாசில்தார் சுப்பையன், கீழப்பாவூர் வட்டார வளர்ச்சி அதிகாரி கந்தசாமி, பாவூர்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரமேஷ்கண்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 25 நாட்களுக்குள் பெயர்பலகை தொடர்பாக தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.