பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் பெண்கள் கோரிக்கை மனு
பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என்று பெண்கள் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என்று பெண்கள் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
கருணை அடிப்படையில் வேலை
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கொடுத்தனர்.
ஈரோடு பகுதியை சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் கொடுத்த மனுவில் கூறி இருந்ததாவது:-
கணவர் இறந்த நிலையில் குழந்தைகளுடன், யாருடைய ஆதரவும் இன்றி கூலி வேலை செய்து பிழைப்பு நடத்துகிறோம். எங்களில் பலர், 10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டம் பெற்றுள்ளோம். சிலர் 'டெட்' உள்ளிட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளோம். மேலும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முறையாக பதிவு செய்து, பதிவை புதுப்பித்து வருகிறோம். ஆதரவற்ற விதவைக்கான சான்றிதழும் பெற்றுள்ளோம்.
அரசின் பல்வேறு துறைகளில் கிராம உதவியாளர்கள், சத்துணவு உள்பட பல்வேறு பணிகள், மதிப்பூதிய பணிகளை கருணை அடிப்படையில் வழங்கவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.
தார்சாலை வசதி
தடப்பள்ளி வாய்க்கால் முறைநீர்ப்பாசன விவசாயிகள் சங்க தலைவர் பிரதாபன் தலைமையில் பொதுமக்கள் கொடுத்த மனுவில், "அந்தியூர் பி.மேட்டுப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பெருந்தலையூர் முதல் தடப்பள்ளி வாய்க்கால் புதுக்கரைதிட்டு வரையிலும், மொட்டையன்கரடு முதல் நல்லிக்கவுண்டனூர் வரை தார்சாலை வசதி இல்லை. இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே எங்கள் பகுதிக்கு தார்சாலை வசதி அமைத்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.
கொலை மிரட்டல்
ஈரோடு ரெயில்வே காலனி வாய்க்கால்மேடு ஈ.பி.நகரை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 46). இவர் தனது மனைவி சுசீலாவுடன் வந்து கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில், "நான் கடந்த 2018-ம் ஆண்டு முதல் மொடக்குறிச்சி அருகே 46 புதூர் ஆனைக்கல்பாளையத்தில் சுமார் 1¼ ஏக்கர் நிலத்தை வாடகை ஒப்பந்தம் செய்து அங்கு மணல், ஜல்லி போன்றவற்றை இருப்பு வைத்து வியாபாரம் செய்து வருகிறேன். இதற்காக ரூ.10 லட்சம் வரை செலவு செய்துள்ளேன். இந்த நிலத்துக்கு 15 ஆண்டுகள் குத்தகை ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் நிலத்தின் உரிமையாளர் வாடகையை உயர்த்தி கேட்கிறார். இல்லையென்றால் இடத்தை காலி செய்ய வேண்டும் என்று கூறுகிறார். அதற்கு நான் மறுப்பு தெரிவித்ததால் கடந்த 20-ந் தேதி எனது வீட்டுக்குள் சுமார் 15 பேர் புகுந்து கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த எனது மகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. எனவே கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்", என்று கூறப்பட்டு இருந்தது.
உள்ளூர் விடுமுறை
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் குருநாதன் தலைமையில் கட்சியினர் கொடுத்த மனுவில், "அந்தியூர் தாலுகா கெட்டிசமுத்திரம் பகுதியில் பிரசித்தி பெற்ற குருநாதசாமி கோவில் உள்ளது. இங்கு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ந் தேதி தேர்த்திருவிழா நடைபெறுகிறது. இதனால் இங்கு 5 நாட்கள் குதிரை சந்தை, மாட்டு சந்தை, கண்காட்சிகள் நடைபெறும். பொதுமக்களின் நலன் கருதி பவானி, அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை 6 நாட்கள் மூட வேண்டும். மேலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்க வேண்டும், கடந்த தேர்த்திருவிழாவில் கால்நடைகளுக்கு சுங்கம் வசூல் செய்வது ரத்து செய்யபட்டதை போல் இந்த வருடமும் ரத்து செய்ய வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.
240 மனுக்கள்
இதேபோல் பவானி எலவமலை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், "எலவமலை மூவேந்தர் நகர் பகுதியில் தாயகம் திரும்பிய மக்களுக்கு சொந்தமான இடம் உள்ளது. இங்கு மர்ம நபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். மேலும் அங்கு இருந்த மரங்களை வெட்டி விற்பனை செய்துவிட்டனர். எனவே மரங்களை வெட்டி விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று கூறிஇருந்தனர்.
இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மொத்தம் 240 மனுக்களை கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் குமரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி கோதைசெல்வி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி ரங்கநாதன் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.