வெள்ளித்திருப்பூர் அருகே சுடுகாட்டு ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு


வெள்ளித்திருப்பூர் அருகே சுடுகாட்டு ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு
x

வெள்ளித்திருப்பூர் அருகே சுடுகாட்டு ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று மாவட்ட வருவாய் அதிகாரியிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

ஈரோடு

ஈரோடு

வெள்ளித்திருப்பூர் அருகே சுடுகாட்டு ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று மாவட்ட வருவாய் அதிகாரியிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

குடிநீர் வினியோகம்

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர். ஈரோடு மாமரத்துப்பாளையம் ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:-

எங்கள் பகுதிக்கு காவிரி ஆற்றில் இருந்து குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. கடந்த 3 மாதங்களாக எங்கள் பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. ஆனால் பக்கத்தில் உள்ள தெருக்களுக்கு தினமும் தண்ணீர் கிடைக்கிறது. எங்கள் பகுதிக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்யாததால் நாங்கள் 1,000 லிட்டர் தண்ணீரை ரூ.300 விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறோம். எங்களால் பணம் கொடுத்து தண்ணீர் வாங்க மிகவும் சிரமமாக உள்ளது. எனவே எங்கள் பகுதிக்கு தடையின்றி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர். இதேபோல் மொடக்குறிச்சி அண்ணா நகர், புதுக்காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், 'எங்கள் பகுதியில் 75-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு அரசு மூலம் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. மின் இணைப்பு பெற்றுள்ளோம். ஆனால், எங்கள் பகுதியில் தண்ணீர் வசதி இல்லை. எனவே எங்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்' என்று கூறி இருந்தனர்.

சுத்திகரிப்பு நிலையம்

கொடுமுடி சென்னசமுத்திரம் அருகே உள்ள வருந்தியாபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:-

சென்னசமுத்திரம் பேரூராட்சிக்கு உள்பட்ட வருந்தியாபாளையம் பகுதியில் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் 'நடந்தாய் வாழி' காவிரி திட்டத்தின் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உள்ளனர். இந்த இடத்தை சுற்றி வருந்தியாபாளையம், வருந்தியாபாளையம் புதுார், ரோட்டூர், ராமநாதபுரம், முனியப்பன் சுவாமி கோவில் பகுதி உள்ளது. இந்த கோவில் பகுதி வழியாகத்தான் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய எடுத்து செல்வார்கள்.

இந்த இடத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்படுவோம். மேலும் குடிநீர் ஆதாரமும் பாதிக்கும்.

சுத்திகரிப்பு நிலையத்தை சுற்றிலும் உள்ள விளை நிலங்கள் பாதிக்கும். அங்கு 150 ஏக்கரில் மஞ்சள், கரும்பு, நெல், வாழை போன்ற பயிர்கள் சாகுபடி செய்துள்ளனர். இவை அனைத்தும் நஞ்சாகும். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படும். எனவே வருந்தியாபாளையம் சுடுகாட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடாது.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

சுடுகாடு ஆக்கிரமிப்பு

அந்தியூர் தாலுகா வெள்ளித்திருப்பூர் அருகே உள்ள முத்துகவுண்டன்புதூர், வில்லமரத்தூர் ஆகிய கிராம மக்கள், தமிழ் புலிகள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் வேங்கை பொன்னுசாமி தலைமையில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து, மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திராவிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-

எங்கள் ஊரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை சுடுகாடாக நாங்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம். சுடுகாட்டை ஒட்டி நிலம் வைத்திருக்கும் அந்த பகுதியை சேர்ந்த சிலர், சுடுகாடு மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதியில் மண்ணை அள்ளி வருகின்றனர்.

அகற்ற வேண்டும்

இதுகுறித்து நாங்கள் அவர்களிடம் கேட்டபோது, 'சுடுகாடு உள்ள இடம் தங்களுக்கு சொந்தமானது' என கூறி எங்களிடம் தகராறு செய்கின்றனர். மாவட்ட நிர்வாகம் நேரடியாக தலையிட்டு, அந்த இடத்தை அளவீடு செய்து, சுடுகாட்டை தனியாக பிரித்து எங்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும்.

மேலும் நாங்கள் ஓடை பள்ளத்து ஓரமாக புறம்போக்கு வண்டிப்பாதையை இதுவரை பயன்படுத்தி வந்தோம். தற்போது அந்த வண்டிப்பாதையையும் ஆக்கிரமித்து உள்ளனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி புதிதாக தார் சாலை அமைத்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

224 மனுக்கள்

ராஜகுல சமூக நலச்சங்கம் சார்பில் தலைவர் செந்தில்குமார் கொடுத்திருந்த மனுவில், 'தமிழகத்தில் ராஜகுல சமூகம் (வண்ணார்) வரலாறு, தொன்மை பெற்றது. இந்த குலம் பற்றி, 'வாய்தா' என்ற சினிமாவில் இழிவாக சித்தரித்துள்ளனர். இந்த சினிமாவில் இந்த சமூகத்தை தொழில் ரீதியாக அவமானப்படுத்தியும், சாதிய வன்மத்தை திணித்தும் இழிவாக சித்தரித்துள்ளனர். வியாபார நோக்கில் இவ்வாறு செய்வது, அந்த சமூகத்தை இழிவுபடுத்துவதாகும். எனவே இந்த படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்' என்று கூறி இருந்தார்.

இதேபோல் மொத்தம் 224 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி அதை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் குமரன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.


Next Story