எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு: தமிழ் பரீட்சை மிகவும் எளிதாக இருந்தது- மாணவ-மாணவிகள் பேட்டி


எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் தமிழ் பரீட்சை மிகவும் எளிதாக இருந்தது என்று மாணவ-மாணவிகள் கூறினார்கள்.

ஈரோடு

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் தமிழ் பரீட்சை மிகவும் எளிதாக இருந்தது என்று மாணவ-மாணவிகள் கூறினார்கள்.

பொதுத்தேர்வு

தமிழ்நாடு முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கின. முதல் நாள் தமிழ் தேர்வு நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் 6 தனித்தேர்வர்கள் மையங்கள் உள்பட 119 மையங்களில் தேர்வு நடந்தது.

காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை தேர்வு நடந்தது. தேர்வு முடிந்ததும் தேர்வு அறைகளை விட்டு மாணவ-மாணவிகள் உற்சாகமாக வெளியே வந்தனர்.

பயம் மறைந்தது

ஈரோடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய மாணவி சுஜிதா கூறியதாவது:-

தமிழ் முதல் தாள் தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. முதல் முறையாக பொதுத்தேர்வு எழுதுவதால் தேர்வு அறைக்கு அச்சத்துடன் வந்தேன். ஆனால், கேள்வித்தாளை பார்த்ததும் அச்சம் மறைந்து விட்டது. மாதாந்திர தேர்வு எழுதுவது போன்று எளிதாக தேர்வு எழுதினேன். அனைத்து தேர்வுகளும் இதுபோன்று இருந்தால் சிறந்த மதிப்பெண்கள் எடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அச்சம் இல்லை

என்.ஜி.வலசு உயர்நிலைப்பள்ளி மாணவர் முகமது காஜா மைதீன் கூறியதாவது:-

நான் படித்த கேள்விகள்தான் தேர்வில் கேட்கப்பட்டு இருந்தன. எனவே எளிதாக இருந்தது. மிகவும் நன்றாக தேர்வு எழுதி இருக்கிறேன். எங்கள் ஆசிரிய-ஆசிரியைகள் ஏற்கனவே தேர்வு குறித்து சிறப்பாக பயிற்சி அளித்து இருந்ததால் அச்சமின்றி தேர்வு எழுதினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

எளிதாக இருந்தது

மாணவி நிரோஷா கூறியதாவது:-

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மிகவும் கடினமாக இருக்கும் என்று பலரும் அச்சுறுத்தினார்கள். ஆனால் எங்கள் ஆசிரியைகள் தேர்வைப்பற்றி பயப்படாமல் சாதாரணமாக தெரிந்த கேள்விகளுக்கு விடையை எழுத வேண்டும் என்று நன்றாக பயிற்சிஅளித்து இருந்தனர். தேர்வு அறைக்கு செல்லும்போது பல கட்டுப்பாடுகள் இருந்ததால் சற்று பயம் இருந்தது. ஆனால் தேர்வு தொடங்கிய பிறகு எந்த அச்சமும் இல்லை. குறிப்பாக கேள்விகள் அனைத்தும் எளிதாக இருந்ததால் பயமின்றி சிறப்பாக தேர்வு எழுதினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

சிறப்பாக எழுதினேன்

மாணவர் தமிழரசன் கூறியதாவது:-

நான் என்.ஜி.வலசு பள்ளியில் இருந்து தேர்வு எழுத இங்கு வந்தேன். தேர்வு அறைக்குள் வரும்போது பதற்றம் இருந்தது. ஆனால் தேர்வு எழுதும் முன்பு கேள்வித்தாள் படிக்க நேரம் இருந்ததால், அதை பார்த்து படிக்கும்போது அனைத்து கேள்விகளும் தெரிந்ததாக இருந்தது. எனவே தேர்வினை சிறப்பாக எழுதி இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

உற்சாகமாக...

மாணவி காயத்திரி கூறியதாவது:-

முதல் முதலாக பொதுத்தேர்வு எழுதுவதால் எப்படி எழுதப்போகிறே னோ என்று லேசான பயம் இருந்தது. ஆசிரியைகள் பல கட்டமாக தேர்வுகள் வைத்து எங்களுக்கு பயத்தை போக்கி இருந்தாலும், லேசான பதற்றம் இருந்தது.

ஆனால் கேள்வித்தாளை படித்தபோது பயம்மறைந்து விட்டது. உற்சாகமாக அனைத்து கேள்விகளுக்கும் பதில் எழுதினேன். மிகவும் எளிதாக தமிழ் தேர்வு இருந்தது. இதுபோல் அனைத்து தேர்வுகளையும் எழுதுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story