ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 25,094 மாணவ-மாணவிகள் எழுதினர்
ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 25 ஆயிரத்து 94 மாணவ-மாணவிகள் எழுதினர்.
ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 25 ஆயிரத்து 94 மாணவ-மாணவிகள் எழுதினர்.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு
பள்ளி கல்வித்துறை சார்பில், ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கான அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இதையொட்டி மாணவ-மாணவிகள் நேற்று காலை உற்சாகமாக தேர்வு மையங்களுக்கு சென்றனர். முன்னதாக அவர்கள் தங்களது பெற்றோரிடம் ஆசி பெற்று கொண்டு பள்ளிக்கூடங்களுக்கு புறப்பட்டனர்.
தேர்வை முன்னிட்டு கோவில்கள், தேவாலயங்களில் மாணவ-மாணவிகள் நேற்று சாமி தரிசனம் செய்தும், பிரார்த்தனை செய்தும் சிறப்பு வேண்டுதல்கள் செய்தனர். மேலும் தேர்வு மையங்களிலும் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள், மாணவ-மாணவிகளை வாழ்த்தி தேர்வு எழுத உற்சாக மூட்டினர்.
துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
ஈரோடு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 283 தனித்தேர்வர்கள் உள்பட, 358 பள்ளிக்கூடங்களில் படிக்கும் 26 ஆயிரத்து 116 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத வசதியாக 119 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. நேற்று காலை சரியாக 10 மணிக்கு தமிழ் தேர்வு தொடங்கியது.
முதல் 15 நிமிடங்கள் தேர்வுத்தாள்களின் வினாக்களை சரி பார்ப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 10.15 மணிக்கு தேர்வு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடிந்தது. முன்னதாக ஈரோடு மாவட்டத்தில் 25 வழித்தடங்கள் மூலம் 7 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் இருந்து வினாத்தாள்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த தேர்வு மையத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.
1,022 மாணவ-மாணவிகள் வரவில்லை
தேர்வுகள் சிறப்பாக நடைபெறும் பொருட்டு 119 முதன்மை கண்காணிப்பாளர்கள் 124 துறை அலுவலர்கள் மற்றும் கூடுதல் துறை அலுவலர்கள், 1,890 அறை கண்காணிப்பாளர்கள் மற்றும் 160 பறக்கும்படை உறுப்பினர்கள் தேர்வு பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் சொல்வதை எழுதுபவர் மற்றும் கூடுதல் நேரம் ஒதுக்கீடு உள்ளிட்ட சிறப்பு சலுகைகள் 682 மாணவ -மாணவிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. 9 கண்பார்வை குறைபாடுள்ள மாணவர்களும் சிறப்பாக தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நேற்று நடந்த தமிழ் தேர்வை எழுத 1,022 மாணவ -மாணவிகள் வரவில்லை. 25 ஆயிரத்து 94 மாணவ -மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை எழுதினார்கள்.
கலெக்டர் ஆய்வு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலை பள்ளிக்கூடத்தில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் தாசில்தார் சங்கர்கணேஷ், பள்ளிக்கூட தலைமை ஆசிரியை சவீதா ஆகியோர் இருந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்துவதற்கு ஈரோடு செங்கோடம்பள்ளத்தில் உள்ள யு.ஆர்.சி. பள்ளிக்கூடம், கோபியில் உள்ள குருகுலம் பள்ளிக்கூடம், சத்தியமங்கலத்தில் உள்ள ராகவேந்திரா பள்ளிக்கூடம் என 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிந்ததும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.