ஈரோட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிந்ததும் செல்பி எடுத்து மகிழ்ந்த மாணவ-மாணவிகள்- வாழ்த்தி வழியனுப்பிய ஆசிரிய, ஆசிரியைகள்


ஈரோட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிந்ததும் செல்பி எடுத்து மகிழ்ந்த மாணவ-மாணவிகள்- வாழ்த்தி வழியனுப்பிய ஆசிரிய, ஆசிரியைகள்
x
தினத்தந்தி 4 April 2023 12:15 AM IST (Updated: 4 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நிறைவடைந்ததும் மாணவ-மாணவிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அவர்களை ஆசிரிய-ஆசிரியைகள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

ஈரோடு

ஈரோடு

ஈரோட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நிறைவடைந்ததும் மாணவ-மாணவிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அவர்களை ஆசிரிய-ஆசிரியைகள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

பிளஸ்-2 பொதுத்தேர்வு

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி தொடங்கியது. தமிழ், ஆங்கிலம் தேர்வுகள் நடந்தபோது தமிழகம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதாதது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் நேற்று பிளஸ்-2 இறுதி தேர்வுகள் நடந்தன. வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் ஆகிய தேர்வுகள் நேற்று நடத்தப்பட்டன.

ஈரோடு மாவட்டத்தில் 24 ஆயிரத்து 918 பேர் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் முதல் நாளில் 2 ஆயிரத்து 290 பேர் தேர்வு எழுதவரவில்லை. நேற்று இறுதி தேர்வு நடந்தது. மையங்களில் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் நண்பகல் 1.30 மணிக்கு தேர்வு அறைகளை விட்டு வெளியே வந்தனர்.

உற்சாகம்

தங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகும் மிக முக்கியமான தேர்வை எழுதி முடித்து விட்ட மகிழ்ச்சியில் அவர்கள் உற்சாகமாக வெளியே வந்தனர்.

பள்ளி வாழ்க்கையில் இதுவே கடைசி நாள் என்பதால், தங்கள் நண்பர்கள், தோழிகளை பிரிந்து செல்ல மனமின்றி அதிக நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். தங்கள் மகன்-மகள்களை அழைத்துச்செல்ல வந்த பெற்றோரும் குழந்தைகளின் மனநிலையை அறிந்து அவர்களுடன் தோழர், தோழிகளிடம் பேசினார்கள்.

செல்பி

மாணவ-மாணவிகள் பலரும் தங்கள் பெற்றோரிடம் இருந்து செல்போன்களை வாங்கி தங்கள் நண்பர்கள், தோழிகளுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சில மாணவ-மாணவிகள் தங்கள் ஆசிரிய-ஆசிரியைகளை தேடிச்சென்று அவர்களிடம் ஆசி பெற்றதுடன், அவர்களுடனும் செல்பி எடுத்துக்கொண்டனர்.

தங்களிடம் 2 ஆண்டுகள் படித்து விட்டு பள்ளி வாழ்க்கையை முடித்துச்செல்லும் தங்கள் அன்பு மாணவர்களை ஆசிரிய-ஆசிரியைகளும் வாழ்த்தி வழியனுப்பினார்கள்.

பிரியாவிடை

ஈரோடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ. ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள், செங்குந்தர் ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிக்கூடங்கள், காமராஜர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, கருங்கல்பாளையம் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி, ரெயில்வேகாலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, குமலன் குட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, வீரப்பன்சத்திரம் மகளிர் மேல்நிலைப்பள்ளி, கலைமகள் கல்வி நிலையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாணிக்கம்பாளையம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திண்டல் வேளாளர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, பி.வி.பி. மேல்நிலைப்பள்ளி, இந்து கல்வி நிலையம் மேல்நிலைப்பள்ளி, ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் என பிளஸ்-2 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்த அனைத்து பள்ளிக்கூடங்கள் முன்பும் மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் பிரிய மனமின்றி பிரியாவிடை அளித்த காட்சி அரங்கேறியது.

இந்த ஆண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் 10-ம் வகுப்பில் கொரோனா காரணமாக அனைவரும் தேர்ச்சி என்ற அடிப்படையில் வெற்றி பெற்றவர்கள். எனவே இந்த ஆண்டு அவர்கள் எழுதிய பிளஸ்-2 தேர்வு வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிப்பதாக அமையும் என்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.


Next Story