ஜமாபந்தி குறித்து போதிய தகவல் தெரிவிக்காததால் பொதுமக்கள் ஏமாற்றம்
வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் ஜமாபந்தி குறித்து போதிய தகவல் தெரிவிக்காததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. அதாவது கடந்த ஆண்டுகளில் ஒரு பிர்கா பகுதிக்கு ஒரே நாளில் ஜமாபந்தி நடைபெறும். வேப்பந்தட்டை தாலுகா பகுதிகளில் உள்ள வெங்கலம், பசும்பலூர், வாலிகண்டபுரம் ஆகிய பிர்கா பகுதிகளில் 3 நாட்களில் ஜமாபந்தி நடந்து முடிந்து விடும். ஆனால் இந்த ஆண்டு ஒரு பிர்கா பகுதிக்கு 3 நாட்கள் என 9 நாட்கள் ஜமாபந்தி நடைபெறுவதாக அறிவித்து நடைபெற்று வருகிறது. எந்தெந்த கிராமங்களுக்கு எந்த எந்த தேதியில் ஜமாபந்தி நடைபெறும் என்பதை போதிய வகையில் அறிவிப்பு செய்யாததால் ஜமாபந்தி எந்த கிராமத்தில் நடைபெறுகிறது என்ற விவரம் தெரியாமல் கிராம மக்கள் மற்ற நாட்களில் வந்து அலைந்து செல்கின்றனர். இவ்வாறு வரும்பொழுது உங்கள் கிராமத்திற்கு ஜமாபந்தி முடிந்து விட்டது என்று சொல்வதால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே ஜமாபந்தியில் மனு கொடுக்காமல் விடுபட்டவர்கள் மனுக்களை கடைசி நாளில் வந்து கொடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.