தண்ணீர் பிடிக்க எதிர்ப்பு தெரிவிப்பதால் பேரூராட்சி அலுவலகம் முன் பொதுமக்கள் தர்ணா


தண்ணீர் பிடிக்க எதிர்ப்பு தெரிவிப்பதால் பேரூராட்சி அலுவலகம் முன் பொதுமக்கள் தர்ணா
x

தனியார் இடத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் பிடிக்க எதிர்ப்பு தெரிவிப்பதால் பேரூராட்சி அலுவலகம் முன் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்

தனியார் இடத்தில் ஆழ்துளை கிணறு

கரூர் மாவட்டம் பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட 10-வது வார்டில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து அதன் அருகே நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது ஆழ்துளை கிணறு மற்றும் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ள இடம் தனி நபருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.

தற்போது அவர் ஆழ்துளை கிணறு தன்னுடைய இடத்தில் உள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் இங்கு தண்ணீர் பிடிக்க வரக்கூடாது என்று கூறுகிறார். இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் வேலைக்கு செல்பவர்கள், வெளியூர் செல்பவர்கள் உள்ளிட்டோர் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் மகாத்மா காந்தி நகரில் தெரு விளக்கு மற்றும் தார் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பேரூராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

தர்ணா போராட்டம்

இந்த நிலையில் ஆத்திரம் அடைந்த கங்கைகொண்ட சோழபுரம் 10-வது வார்டு பகுதி மக்களும், மகாத்மா காந்தி நகர் பகுதி மக்களும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் தேவி நாகராஜன் தலைமையில் கங்கைகொண்ட சோழபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், 10-வது வார்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு தனி நபருக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டது முன்னாள் பேரூராட்சி தலைவரின் தவறாகும். இதனால் தற்போது நாங்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறோம். தற்போது தண்ணீர் பிடிக்க எதிர்ப்பு தெரிவிப்பதால் குடிப்பதற்கும், சமைப்பதற்கும் மற்றும் தங்களின் அன்றாட தேவைகளுக்கும் போதுமான தண்ணீர் இன்றி நாங்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறோம். எனவே இதற்கு பேரூராட்சி நிர்வாகம் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றனர்.

பேச்சுவார்த்தை

மகாத்மா காந்தி நகர் பகுதி மக்கள் கூறுகையில், இப்பகுதியில் சாலையோரத்தில் தெரு விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரத்தில் இப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலைகளில் பெண்கள், குழந்தைகள் நடந்து செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுவதினால் வாகன ஓட்டிகள் அடிக்கடி நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இந்நிலையில் போராட்டம் குறித்து அறிந்த லாலாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி, பேரூராட்சி தலைவர் சவுந்தரபிரியா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில் பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்படவே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story