கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் தர்ணா


கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் தர்ணா
x

கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

திருச்சி

இலவச பட்டா ரத்து

திருச்சி சோமரசம்பேட்டை பகுதியில் 78.5 சென்ட் நிலம் ஆதிதிராவிடர்கள் 65 பேருக்கு கடந்த 1996-ம் ஆண்டு தமிழக அரசால் வழங்கப்பட்டது. இந்த வீட்டு மனைகளை பெற்ற பயனாளிகள் குடிசை அமைத்து அங்கு வாழ்ந்து வந்தனர். இந்த பகுதியில் முறையான சாலை, மின்வசதி இல்லாததாலும், மழை வெள்ளம் சூழ்ந்ததாலும், அங்கிருந்தவர்கள் அருகில் உள்ள பகுதிக்கு வாடகை வீடுகளுக்கு சென்றனர்.

மேலும் தங்களுக்கு இலவச பட்டா வழங்கிய இடத்தில் தொகுப்பு வீடு கட்டிக்கொடுக்கும்படி கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்த இலவச பட்டாக்களை மாவட்ட நிர்வாகம், கோர்ட்டு உத்தரவை காண்பித்து ரத்து செய்ததாக தெரிகிறது. இதுபற்றி இலவச பட்டா பெற்றவர்களுக்கு எந்த தகவலும் தெரியவில்லை.

கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா

இந்த நிலையில், தற்போது, பட்டா ரத்து செய்யப்பட்டதை அறிந்த பொதுமக்கள், சமூக நீதி பேரவையின் ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார், சம்சுதீன் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலை திரண்டு வந்து முற்றுகையிட்டனர். இதை அறிந்த கலெக்டர் பிரதீப்குமார் அங்கு வந்து வீட்டுமனை இழந்த மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

அப்போது பெண்கள் கலெக்டரின் காலில் விழுந்து கதறி அழுதனர். மேலும் நில உடமையாளர்களுக்கு மீள் வழங்க கொடுத்த உத்தரவை ரத்து செய்து, இலவச பட்டாக்களை ரத்து செய்ததை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர். கலெக்டர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுப்பாதை வேண்டும்

பா.ஜனதா கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் அப்பகுதியினர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், கூத்தைப்பார் பேரூராட்சி கணேசாநகர் பகுதியில் உள்ள அரசு நிலத்தில் சுற்றுச்சுவர் அமைத்து, பொது பாதையை அடைக்க அங்குள்ள பள்ளி நிர்வாகம் தயாராக உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் அவசர தேவைக்கு வெளியில் செல்லமுடியாத நிலை ஏற்படும். எனவே பொதுப்பாதையை அடைக்காமல் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டு இருந்தது.

பா.ம.க. மத்திய மாவட்ட செயலாளர் உமாநாத் தலைமையில் உறையூர் பகுதி மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், உறையூர் சி.எஸ்.ஐ. மிஷன் ஆஸ்பத்திரி சாலையில் அரசு வழிகாட்டுதல்படி சாலைகளை பெயர்த்து புதிய சாலை போடாமல், இருந்த சாலை மீதே மீண்டும் தார்க்கலவை கொட்டி சாலை போட்டுள்ளனர். மேலும், பள்ளிகள், கோவில்கள், தேவாலயங்கள், மசூதி உள்ள பகுதிகளில் வேகத்தடையும் அமைக்கவில்லை. எனவே சாலையை அரசு வழிகாட்டுதலின்படி அமைத்து, வேகத்தடைகளை அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இதேபோல் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 393 மனுக்கள் கூட்டத்தில் பெறப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவியும் வழங்கப்பட்டது. இதேபோல் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மேயர் அன்பழகன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இதில் ஆணையர் வைத்திநாதன், செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், மண்டல தலைவர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story