கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா
சாதி சான்றிதழ் கேட்டு கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கராபுரம் அருகே புதுப்பட்டு கிராமத்தில் ரெட்டி கஞ்சம் என்கிற சமூகத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களின் குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதற்கும், பள்ளி படிப்பை முடித்தவர்களை கல்லூரியில் சேர்ப்பதற்கும் சாதிச்சான்றிதழ் கேட்டு சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்தனர்.ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. சாதி சான்றிதழ் கிடைக்காததால் அவர்கள் தங்களது குழந்தைகளை பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த ரெட்டி கஞ்சம் சமுகத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களுக்கு உடனடியாக சாதிச்சான்றிதழ் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கோஷங்களை எழுப்பினர். இது பற்றி தகவல் அறிந்த வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாதிச்சான்றிதழ் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். .இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.