ஆயக்குடி பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா


ஆயக்குடி பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா
x
தினத்தந்தி 12 Oct 2023 5:30 AM IST (Updated: 12 Oct 2023 5:30 AM IST)
t-max-icont-min-icon

முறையாக குடிநீர் இணைப்பு வழங்கக்கோரி ஆயக்குடி பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

ஆயக்குடி பேரூராட்சியில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள குடியிருப்பு, வணிக நிறுவனங்களுக்கு பேரூராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது ஆயக்குடியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்நிலையில் ஆயக்குடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் நேற்று பேரூராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென பேரூராட்சி அலுவலகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

அப்போது, ஆயக்குடியில் முறையாக குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். தகவலறிந்த ஆயக்குடி போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீசார், பேரூராட்சி அலுவலர்கள் தர்ணாவில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் குடிநீர் இணைப்பு வழங்குவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. அதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story