அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x

அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர்

குளித்தலை ஊராட்சி ஒன்றியம், ராஜேந்திரம் கிராமத்தில் மகா மாரியம்மன், காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலையொட்டி அரசு காலி நத்தம் புறம்போக்கு நிலம் உள்ளது. இப்பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் அந்த இடத்தை போலி ஆவணங்கள் மூலம் கோவில் சுற்றுப் பாதை பயன்பாட்டினை தடுக்கும் வகையில் ஆக்கிரமிப்பு செய்து வருகிறாராம். இப்பகுதியில் யாரேனும் இறந்தால் அவர்களுடைய உடலை இந்த இடம் வழியே பல ஆண்டு காலமாக இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொண்டு சென்று வந்துள்ளனர். பல ஆண்டுகளாக இப்பகுதி பொதுமக்கள் பயன்பாட்டில் இந்த இடம் இருந்து வருகிறதாம்.

இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்த நபர் குளித்தலையில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்த பொழுது, வழக்கு விசாரணை நடைபெற்று உள்ளது. அப்போது அந்த தனிநபர் ஆஜராகததாலும் ஆவணங்கள் சமர்பிக்கத் தவறியதாலும் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பொது மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்காமலும், மயானத்திற்கு உடலை எடுத்துச்செல்ல இடையூறு விளைவித்து வரும் அந்த நபர்மீது நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பு அகற்றி பொது மக்களுக்கு அந்த இடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரக் கோரி இப்பகுதி பொதுமக்கள் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இது தொடர்பாக குளித்தலை வட்டாட்சியர் மகுடேஸ்வரன் இரு தரப்பை சேர்ந்தவர்களையும் விசாரணைக்காக நேற்று அழைத்துள்ளார். அதன்படி நேற்று குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வந்திருந்தனர். வட்டாட்சியர் இருதரப்பினருடைய விசாரணை மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது பொதுமக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பாதையை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்ததை அகற்றி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட்டாட்சியரிடம் தெரிவித்ததாக அவர்கள் கூறி அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story