பூனாச்சி ஊராட்சியில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
பூனாச்சி ஊராட்சியில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அம்மாபேட்டை
பூனாச்சி ஊராட்சியில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாதியில் நிற்கும் பணி
அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் பூனாச்சி ஊராட்சியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி நபார்டு திட்டத்தின் கீழ் உலக வங்கி நிதியுதவியான ரூ.1 கோடியே 57 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நடந்து வருகிறது. இந்த உயர்மட்ட பாலம் பூனாச்சி-செம்படாபாளையம் செல்லும் ரோட்டில் நத்தமேடு என்ற இடத்தில் அமைக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு இந்த உயர்மட்ட பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் 1½ ஆண்டுகள் முடிந்தும் இன்னும் பாலம் முழுமை பெறாமல் பாதியிலேயே நிற்கிறது.
விரைந்து முடிக்க கோரிக்கை
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், 'இந்த ஓடையின் குறுக்கே பல ஆண்டு காலமாக தரைமட்ட பாலம் இருந்து வந்தது. இந்தப் பாலம் வழியாக அந்தியூர்-அம்மாபேட்டை மெயின் ரோட்டில் இருந்து செம்படாபாளையம் மற்றும் சித்தார் செல்லும் ரோட்டிற்கு குறுக்கு வழியாக பயன்படுத்தி வந்தோம்.
மழைக்காலங்களில் சென்னம்பட்டி வனப்பகுதியில் இருந்து வரும் மழை நீர் சித்தார் ஓடை வழியாக பெருக்கெடுத்து வந்து நத்தமேடு பகுதி பாலத்தை கடந்து சித்தாரில் சென்று காவிரியில் கலக்கிறது. தற்போது மழைக்காலம் நெருங்கி விட்டதால் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பாலம் கட்டும் பணியை விரைந்து முடித்து தர வேண்டும்' என்று கோரிக்கை விடுத்துள்ளனர்