'கோரிக்கைகளுக்காக பொதுமக்கள் எந்நேரமும் என்னை சந்திக்கலாம்'-ராமநாதபுரம் மாவட்ட புதிய கலெக்டர் விஷ்ணு சந்திரன் பேட்டி


கோரிக்கைகளுக்காக பொதுமக்கள் எந்நேரமும் என்னை சந்திக்கலாம்-ராமநாதபுரம் மாவட்ட புதிய கலெக்டர் விஷ்ணு சந்திரன் பேட்டி
x
தினத்தந்தி 23 May 2023 12:15 AM IST (Updated: 23 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளுக்காக பொதுமக்கள் எந்நேரமும் என்னை சந்திக்கலாம் என ராமநாதபுரம் மாவட்ட புதிய கலெக்டர் விஷ்ணு சந்திரன் கூறினார்

ராமநாதபுரம்

கோரிக்கைகளுக்காக பொதுமக்கள் எந்நேரமும் என்னை சந்திக்கலாம் என ராமநாதபுரம் மாவட்ட புதிய கலெக்டர் விஷ்ணு சந்திரன் கூறினார்..

புதிய கலெக்டர் பொறுப்பேற்பு

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த ஜானிடாம் வர்கீஸ் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக சென்னை நகராட்சி நிர்வாக இணை ஆணையராக பணியாற்றி வந்த விஷ்ணுசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து நேற்று பிற்பகலில் அவர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தனது பணி பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் 2015-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்று 2017-ம் ஆண்டு முதல் 2019 வரை ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சப்-கலெக்டராக பணியாற்றி உள்ளேன். அதன்பின்னர் நாகர்கோவில், தூத்துக்குடி, நெல்லை, சென்னை போன்ற இடங்களில் பணியாற்றி விட்டு மீண்டும் ராமநாதபுரத்திற்கு கலெக்டராக வந்துள்ளேன். மீண்டும் எனது சொந்த வீட்டிற்கு வந்துள்ளதை போன்று உணர்கிறேன். எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த தமிழக முதல்-அமைச்சர் மற்றும் அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை பல அதிகாரிகள் நன்றாக பணியாற்றி உள்ளனர். அவர்கள் எடுத்து செய்த நல்ல பல பணிகளை தொடர்ந்து தொய்வின்றி செய்வதே எனது நோக்கம்.

திட்டங்கள் மக்களை சென்றடைய பாடுபடுவேன்

அரசு பல நல்ல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அந்த திட்டங்கள் அனைத்தையும் மாவட்டம் முழுவதும் மக்களை சென்றடைய செய்தாலே போதும். என்னுடைய நோக்கம் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே ஆகும். பொதுமக்கள் எந்த நேரமும் அவர்களின் கோரிக்கை குறித்து என்னை நேரில் சந்திக்கலாம். அவர்களின் கோரிக்கைகள் என்னால் முடிந்தவரை நிறைவேற்ற முயற்சி செய்வேன்.

அரசால் செய்து கொடுக்க முடியும் என்ற பணிகளை மக்களுக்காக நான் செய்து கொடுக்க தயாராக உள்ளேன். தமிழக முதல்-அமைச்சர், ஊரக வளர்ச்சி, வருவாய் உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்த அறிவுரை வழங்கி உள்ளார். கல்வியை பொறுத்தவரை சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் அதனை முன்னேற்ற முயற்சி செய்வேன். மருத்துவம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தி மக்களுக்கு வேண்டிய அனைத்து பணிகளையும் செய்வேன். மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து தேவையான நடவடிக்கை எடுப்பேன். இந்த மாவட்டத்தில் பணியாற்றியவன் என்பதால் மக்களின் தேவைகள், கலாசாரம், பிரச்சினைகள் போன்றவை குறித்து அறிந்துள்ளதால் அதனை நிறைவேற்றுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலெக்டர் பதவியேற்பு நிகழ்ச்சியின்போது கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார், பயிற்சி சப்-கலெக்டர் நாராயண சர்மா, பரமக்குடி சப்- கலெக்டர் அப்தாப் ரசூல், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு, நேர்முக உதவியாளர் சேக்மன்சூர், மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி அலுவலர் விஜயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story