பொதுமக்கள் சாலைமறியல்


பொதுமக்கள் சாலைமறியல்
x

கெங்கவல்லி அருகே மாடு திருடர்களை பிடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சேலம்

கெங்கவல்லி:-

கெங்கவல்லி அருகே மாடு திருடர்களை பிடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

மாடுகள் திருட்டு

கெங்கவல்லி அருகே ஆணையம்பட்டி புதூர் பகுதியில் வசிப்பவர்கள் கந்தசாமி, ராஜேந்திரன். இவர்கள் இருவரும் ஏரிக்கரை அருகே விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் இவர்கள் இருவரும் தலா 2 பசுக்கள் என 4 பசுக்களை வளர்த்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு இவர்கள் தோட்டத்தில் கட்டி இருந்த 4 பசுக்களை மர்ம நபர்கள் சரக்கு வாகனம் ஒன்றில் திருடிச்சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் மாட்டின் உரிமையாளர்களான கந்தசாமி, ராஜேந்திரன் ஆகிய இருவரும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சரக்கு வாகனம் ெசன்ற பாதையில் காணாமல் போன மாடுகளை தேடிச்சென்றனர்.

போலீஸ் நிலையத்தில் திரண்டனர்

இதுஒருபுறம் இருக்க கந்தசாமி, ராஜேந்திரனின் குடும்பத்தினர் கெங்கவல்லி போலீஸ் நிலையத்துக்கு திரண்டு சென்று மாடுகள் காணாமல் போனது குறித்து புகார் செய்தனர். அவர்கள் கொடுத்த புகாரில், ஆணையம்பட்டியை சேர்ந்த கரிகாலன், அவருடைய நண்பர்கள் பாலாஜி, கருப்பையா ஆகியோர் தான் தங்கள் மாடுகளை திருடிச்சென்று இருக்கலாம் என்று குறிப்பிட்டு இருந்தனர்.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்த நிலையில் நேற்று இரவு வரை மாடுகளை போலீசார் கண்டுபிடித்து கொண்டு வரவில்லை என்பதால் மாட்டின் உரிமையாளர்கள் தரப்பை சேர்ந்தவர்கள் அதிருப்தி அடைந்தனர்.

சாலைமறியல்

மாடுகள் மீட்டு கொண்டு வரப்படாததால் இரவு 8.30 மணி அளவில் திருட்டு போன மாடுகளின் உரிமையாளர்கள், உறவினர்கள் உள்பட பொதுமக்கள் டிராக்டரை சாலையில் நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இது குறித்து தகவல் கிடைத்ததும், ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒலிபெருக்கி மூலம் சாலைமறியலை கைவிட வேண்டும் என்று அங்கிருந்தவர்களிடம் அறிவுறுத்தினார். இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் ஆணையம்பட்டி பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story