அடிக்கடி நிறுத்தப்படுவதால் பொதுமக்கள், மாணவர்கள் அவதி
கொத்தமங்கலம் வரும் அரசு டவுன் பஸ் அடிக்கடி நிறுத்தப்படுவதால் பொதுமக்கள், மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
புதுக்கோட்டையில் இருந்து தினமும் காலை 6.30-க்கு கொத்தமங்கலம் வரவேண்டிய அரசு பஸ் தடம் எண் 3 நடத்துனர் மற்றும் ஓட்டுனர் வரவில்லை என மாதத்தில் 5 மற்றும் 6 முறை வருவதில்லை. இதனால் வெளியூர் பகுதிகளில் இருந்து அதிகாலை நேரங்களில் வரவேண்டிய பயணிகள் பெரும் சிரமப்பட்டு வருவதோடு கீரமங்கலம், பேராவூரணி, மேற்பனைக்காடு, சேந்தன்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து புதுக்கோட்டைக்கு கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். அதேபோல வெளியூர் பகுதிகளுக்கு பணிக்கு செல்லும் அரசு ஊழியர்கள், மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகள், வியாபாரிகள் அனைவரும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஏற்கனவே இதே அரசு டவுன் பஸ் மதியம் 2 மணிக்கு வரவேண்டியதையும் நிறுத்தியுள்ள நிலையில், தற்போது அதிகாலை நேரத்தில் வரவேண்டியதையும் நிறுத்துவதால் பொதுமக்களை அதிருப்தி அடைய செய்துள்ளது. தொடர்ந்து பஸ் வரவில்லை என்றால் போராட்டங்கள் நடத்தவும் முடிவு செய்துள்ளதாக கூறுகின்றனர். ஆகவே துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.