நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு; மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு


நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு; மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு
x

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க மேற்கொள்ளும் ஏற்பாடு பணிகள் குறித்து மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

திருநெல்வேலி

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க மேற்கொள்ளும் ஏற்பாடு பணிகள் குறித்து மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இதனால் முதல்-அமைச்சர் மற்றும் மின்வாரியத்துறை அமைச்சர் உத்தரவின் பேரில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அதன்படி நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி, பல்நோக்கு மருத்துவமனை ஆகிய 2 ஆஸ்பத்திரிகளிலும் வடகிழக்கு பருவமழை போன்ற பேரிடர் காலங்களில் மின்தடை ஏற்பட்டால் உடனடியாக மாற்று வழியில் மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி, நெல்லை நகர்புற கோட்ட செயற்பொறியாளர் முத்துக்குட்டி ஆகியோர் மேற்கொண்டனர்.

மாற்றுப்பாதையில்....

நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பாளையங்கோட்டை கே.டி.சி நகர் துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பேரிடர் காலங்களில் ஆஸ்பத்திரி பகுதிகளில் மின்தடை ஏற்பட்டால் சமாதானபுரம், தியாகராஜநகர் துணைமின் நிலையங்களில் இருந்து மின்வினியோகம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் பல்நோக்கு ஆஸ்பத்திரியில் உள்ள ஜெனரேட்டர்களை நல்ல இயக்க நிலையில் வைத்துக்கொள்ளவும், அதற்கு தேவையாக டீசலை கூடுதலாக கையிருப்பு வைக்கவும் மின்வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

இந்த ஆய்வில் நெல்லை சந்திப்பு உபகோட்ட உதவி செயற்பொறியாளர் தங்கமுருகன், மகாராஜநகர் உதவி மின் பொறியாளர் வெங்கடேஷ், பொதுப்பணித்துறை பொறியாளர்கள் சதீஷ், அப்துல்லா, மின் பணியாளர்கள் மற்றும் மருத்துவக்கல்லூரி பணியாளர்கள் உடன் இருந்தனர்.


Next Story