நடப்பாண்டு பயிர்க்கடன் வழங்க ரூ.300 கோடி ஒதுக்கீடு


நடப்பாண்டு பயிர்க்கடன் வழங்க ரூ.300 கோடி ஒதுக்கீடு
x

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டு விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டு விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.

ஆய்வுக்கூட்டம்

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மைத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை மூலம் உர ஆய்வாளர்கள், உர உற்பத்தியாளர்கள், தொடக்க வேளாண் கடன் சங்க செயலாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கினார். அப்போது வேளாண்மைத்துறை மற்றும் கூட்டுறவுத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் அவர் கூறியதாவது:- பொதுவாக ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டம், பின் தங்கிய மாவட்டம் என சொல்லி வந்த நிலையை மாற்றி கடந்த காலங்களில் வேளாண்மைத்துறையின் மூலமும், கூட்டுறவுத்துறையின் மூலமும் பல்வேறு திட்டங்களை வழங்கி இன்றைய காலத்தில் விவசாயிகள் பல்வேறு தொழில் நுட்பங்களுடன் சிறந்த முறையில் விவசாய பணிகளை மேற்கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ரூ.300 கோடி ஒதுக்கீடு

மேலும் விவசாய பணிகளை திட்டமிட்ட காலத்திற்குள் மேற்கொள்ள ஏதுவாக நடப்பாண்டிற்கு பயிர்கடன் வழங்க ரூ.300 கோடி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் கால்நடைகள் பெற்று பயன்பெற அதற்காகவும் ரூ.300 கோடி கடன் வழங்கிட ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனை தொடர்ந்து விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு கடன் திட்ட உதவிகளை சிறந்த முறையில் வழங்கிய 6 கூட்டுறவு கடன் சங்க அலுவலர்களுக்கு நினைவு பரிசு வழங்கியதுடன் இதேபோல அனைத்து கூட்டுறவு கடன் சங்க அலுவலர்களும் சிறப்பாக செயல்பட்டு

விவசாயிகளிடமும், கால்நடை வளர்ப்போரிடமும் பாராட்டுகளை பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார். முன்னதாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் கிராமப் பகுதியில் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் நடமாடும் மத்திய கூட்டுறவு வங்கி வாகனத்தை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் மனோகரன், ராமநாதபுரம் சரக துணைப்பதிவாளர் சுப்பையா, பரமக்குடி சரக துணைப்பதிவாளர் சுல்தான் மைதீன் ஜவகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story