நடைபாதையில் வசிப்பவர்களுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை கிடைக்க ஏற்பாடு - சென்னை மாநகராட்சி கமிஷனர்


நடைபாதையில் வசிப்பவர்களுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை கிடைக்க ஏற்பாடு - சென்னை மாநகராட்சி கமிஷனர்
x

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபாதையில் வசிப்பவர்களுக்கு புதிய வங்கி கணக்கு தொடங்கி ரூ.1,000 உரிமைத்தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை

கலெக்டர் தலைமையில் குழு

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் 15-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்துக்கு 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் மாவட்டம் தோறும் கலெக்டர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல, அரசு சார்பில் விண்ணப்பப் படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படிவத்தை ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று வழங்க உள்ளனர். சென்னையை பொறுத்தவரை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் பல்வேறு துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். இதற்காக விண்ணப்பப் படிவம் அச்சடிக்கும் பணி நடந்து வருகிறது.

இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

சிறப்பு முகாம்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான விண்ணப்பப் படிவத்தை வீடு, வீடாக வழங்குவதற்கும், பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை திரும்ப பெறுவதற்கும் அனைத்து துறை அதிகாரிகளும், ஊழியர்களும் ஒருங்கிணைந்து செயல்பட உள்ளோம். ரேஷன் கார்டு எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகள், சமுதாயக்கூடங்கள், அரசு அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்க முடிவு செய்துள்ளோம்.

விண்ணப்பப் படிவங்களை கொண்டுவரும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ஒரு நாளைக்கு ஒரு ரேஷன் கடைக்கு 50 முதல் 60 பேர் வரையில் வரவழைத்து விண்ணப்பம் வழங்க திட்டமிட்டுள்ளோம். ஒவ்வொரு முகாமுக்கும் ஒரு பொறுப்பு அதிகாரி, வரி மதிப்பீட்டாளர், சுகாதார ஆய்வாளர், மேற்பார்வையாளர், துப்புரவு ஆய்வாளர் நியமிக்கப்பட உள்ளனர்.

வங்கி கணக்கு

தமிழக அரசு அறிவிக்கும் தேதியில் இருந்து விண்ணப்பப் படிவம் வழங்கப்படும். சென்னையில் ஏழை, எளிய மக்கள் ரேஷன் அட்டைகள் இல்லாமல் இருக்கலாம். குறிப்பாக, நடைபாதையில் வசிப்பவர்கள், ஆதரவற்றோர், இரவு நேர காப்பகங்களில் உள்ள பெண்கள் ஆகியோரை கண்டறிந்து ரேஷன் அட்டை கிடைக்க ஏற்பாடு செய்து, அவர்களுக்கும் ரூ.1,000 உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வங்கி கணக்கு இல்லாத பெண்களுக்கு புதிய வங்கி கணக்கு தொடங்கி அவர்களுக்கும் உரிமைத்தொகை கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்க உள்ளோம். உண்மையான பயனாளிகள் விட்டுப்போகக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story