மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கல்
மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கப்பட்டது.
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தினை தமிழக மாற்றுத்திறனாளி நலத்துறை அரசு செயலாளர் ஆனந்தகுமார் பார்வையிட்டு அதன் பயன்பாட்டினை குறித்து கேட்டறிந்தார். பின்னர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 8 பேருக்கு ரூ.4 லட்சத்து 53 ஆயிரத்து 300 மதிப்பிலான செயற்கை கால், செயற்கை கை போன்றவற்றை வழங்கினார். தொடர்ந்து பஞ்சமாதேவி ஊராட்சியில் மாற்றுத்திறனாளிக்கான பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட விடியல் வீடு திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டப்பட்டுள்ள வீட்டினை பார்வையிட்டு, அதன் சிறப்புகள் மற்றும் பயன்பாடு குறித்து கேட்டறிந்தார். முன்னதாக சீத்தாப்பட்டி கிராமத்தில் ஒரு மனநலம் காப்பகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அவசர சிகிச்சை பிரிவு மையத்தினை பார்வையிட்டு, புதிய ஆம்புலன்ஸ் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.