வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்; விவசாயிகள் சங்க மாநில குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்க மாநில குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்க மாநில குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மாநில கூட்டம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில குழு கூட்டம் கடந்த 2 நாட்களாக குற்றாலத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சாமி நடராஜன், அகில இந்திய இணைச் செயலாளர் ரவீந்திரன், மாநில பொருளாளர் பெருமாள் மற்றும் மாநில குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தென்காசி மாவட்ட செயலாளர் கணபதி வரவேற்றார்.
கூட்டத்தில், கருகிய பயிர்களை காப்பாற்றுவதற்கு காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை வழங்க வேண்டும். இதற்கு உரிய தொடர் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். கடும் வறட்சி ஏற்பட்ட காரணத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.
நிவாரணம் வழங்க வேண்டும்
தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஒன்றியம், நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஒன்றியம், சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியம், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆகிய ஒன்றியங்களையும் பாதிக்கப்பட்ட பகுதியாக இணைத்து அறிவிக்கப்பட்ட நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும். என்.எல்.சி.யால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களை கண்காணிக்க ஆளில்லா விமானங்களை பயன்படுத்த இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை சீர்குலைக்கும் முயற்சியை மாநில குழு வன்மையாக கண்டிக்கிறது. வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதம் மற்றும் உயிர் சேதத்தை தடுக்கக்கோரியும் முழுமையான மருத்துவ சிகிச்சைக்கு நிதி உதவி மற்றும் மனித உயிர் பலிக்கு ரூ.25 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் மாவட்ட தலைவர் வேணுகோபால் நன்றி கூறினார்.