6 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
6 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 16 கிராமங்களில் கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டு சாலையில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை ரூ.3,200 கோடி செலவில் 136 கிலோ மீட்டர் தூரத்திற்கு 6 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த சாலை கண்ணிகைபேர், பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், சென்னங்காரணி, பருத்தி மேனிகுப்பம், பனப்பாக்கம், பெரண்டூர், போந்தவாக்கம், வெங்களத்தூர், பிச்சாட்டூர் வழியாக சித்தூர் வரை அமைய உள்ளது. இதன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் 800-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக அமைந்துள்ள ஆயிரத்து 300 ஏக்கர் நஞ்சை நிலம் பாதிப்படையும். மேலும் 15-க்கும் மேற்பட்ட ஏரிகள், 30-க்கும் மேற்பட்ட குளங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு தங்கள் கிராமங்கள் வழியாக 6 வழிச்சாலை அமைக்க கூடாது என்றும், மாற்றுப்பாதையில் 6 வழிச்சாலை அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் 6 வழிச்சாலை எதிர்ப்பு தெரிவித்து நேற்று 16 கிராமங்களில் உள்ள வீடுகள், விளைநிலங்கள், கடைகள் ஆகியவற்றில் கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதற்கு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சம்பத் தலைமை தாங்கினார். செயலாளர் துளசி நாராயணன், ஒன்றிய கவுன்சிலர் ரவி, ஊத்துக்கோட்டை தாலுகா நஞ்சை விவசாயிகள் சங்கத் தலைவர் குணசேகரரெட்டி காக்கவாக்கம் சசிகுமார், பருத்தி மேனிகுப்பம் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.