மண்ணச்சநல்லூர் அருகே குடிநீர் வராததை கண்டித்து அரசு பஸ்களை சிறை பிடித்து பெண்கள் போராட்டம்


மண்ணச்சநல்லூர் அருகே குடிநீர் வராததை கண்டித்து அரசு பஸ்களை சிறை பிடித்து பெண்கள் போராட்டம்
x

மண்ணச்சநல்லூர் அருகே குடிநீர் வராததை கண்டித்து அரசு பஸ்களை சிறை பிடித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி

மண்ணச்சநல்லூர் அருகே குடிநீர் வராததை கண்டித்து அரசு பஸ்களை சிறை பிடித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிநீர் வினியோகம்

மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஊராட்சி சார்பில் அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குடிநீரை ஏற்றி வீட்டு இணைப்புக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 12 நாட்களாக வீட்டு இணைப்பிற்கு குடிநீர் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். அன்றாட பணிகளை செய்ய முடியாமல் திணறினர்.

பஸ்கள் சிறைபிடிப்பு

இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகம் மற்றும் மண்ணச்சநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், வேதனை அடைந்த திருப்பைஞ்சீலி வடக்குத்தெருவைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று காலை 7.30 மணிக்கு காலிக்குடங்களுடன் திருப்பைஞ்சீலி கடைவீதியில் அமர்ந்து, அந்த வழியாக வந்த அரசு பஸ்களை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராமன் தலைமையிலான போலீசார் மற்றும் ஊராட்சி செயலாளர் சிவலிங்கம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, ஊராட்சி செயலாளருக்கும், பொது மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், உடனடியாக தண்ணீர் வினியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story