பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு... 150-வது நாளாக தொடர் போராட்டம் நடத்தும் கிராம மக்கள்...!
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து 150-வது நாளாக கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றியுள்ள வளத்தூர், நெல்வாய், தண்டலம், நாகப்பட்டு, மடப்புரம், தொடூர், ஏகனாபுரம், மகாதேவி மங்கலம், சிங்கிலிபாடி, எடையார்பாக்கம், குணகரம்பாக்கம், அக்கம்மாபுரம் ஆகிய 13 கிராம பகுதிகளை உள்ளடக்கி பரந்தூர் பசுமை வெளிவிமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த விமான நிலையத்தால் நெல்வாய், தண்டலம், மடப்புரம், நாகப்பட்டு, ஏகனாபுரம், மேலேறி ஆகிய கிராமங்களில் விவசாய நிலங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளும் அகற்றப்பட உள்ளதாக எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், கடந்த 19-ம் தேதி கிராம உரிமை மீட்பு பேரணி என்ற பெயரில் கலெக்டரிடம் மனு வழங்க பேரணியாக சென்றனர். அப்போது, அமைச்சர்களை சந்தித்து உங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் பேச்சுவார்தை நடத்தினர். இதனை ஏற்றுக் கொண்டு பேரணியை முடித்து கொண்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
அதன்படி தலைமை செயலகத்தில் கடந்த 21-ம் தேதி நடைபெற்ற பேச்சு வார்த்தையில் கிராம மக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகள் தெரிவித்தனர். இருப்பினும் தங்களது போராட்டம் தொடரும் என கிராம மக்கள் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் கிராம மக்களின் தொடர் போராட்டம் இன்று 150-வது நாளை எட்டியுள்ளது. கிராமத்தில் உள்ள முதியவர்கள், பெண்கள், இளைஞர்கள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டு, விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.