வருகிற 29-ம் தேதி கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் - முத்தரசன் அறிவிப்பு
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வருகிற 29-ம் தேதி கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என முத்தரசன் கூறியுள்ளார்.
தர்மபுரி,
இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் தர்மபுரியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
காசி தமிழ் சங்கம விழாவில் தமிழ் மொழியை மிகவும் பாராட்டி பேசும் பிரதமர் மோடி தமிழ் மொழி வளர்ச்சிக்காக கடந்த 2017- ம் ஆண்டு முதல் 2020- ம் நிதி ஆண்டு வரை ஒதுக்கிய தொகை வெறும் ரூ.22 கோடி மட்டுமே. அதே நேரத்தில் பொதுமக்களிடம் பயன்பாட்டில் இல்லாத சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்கு ரூ. 222 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கவர்னர் ரவி தமிழகத்தில் போட்டி அரசாங்கம் நடத்தி வருகிறார். கவர்னர் மாளிகையை பா. ஜனதா அலுவலகமாக நடத்துகிறார். அரசியல் சாசனத்தின் படி செயல்பட வேண்டிய கவர்னர் தமிழக அரசு அனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. ஆனால் பிரதமர் வருகையின்போது பாதுகாப்பு குறைபாடு இருந்ததாக தமிழக பா. ஜனதா தலைவர் கொடுத்த மனு தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க முயற்சிக்கிறார்.
இதனால் கவர்னரை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி வருகிற 29- ந்தேதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். இதில் தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.