கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து சிவகாசியில் 22-ந் தேதி போராட்டம்-மாணிக்கம்தாகூர் எம்.பி. பேட்டி


கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து சிவகாசியில் 22-ந் தேதி போராட்டம்-மாணிக்கம்தாகூர் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 16 Sep 2022 6:45 PM GMT (Updated: 16 Sep 2022 6:46 PM GMT)

கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து சிவகாசியில் 22-ந் தேதி போராட்டம் நடத்தப்படும் என மாணிக்கம்தாகூர் எம்.பி. கூறினார்.

விருதுநகர்

சிவகாசி,

கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து சிவகாசியில் 22-ந் தேதி போராட்டம் நடத்தப்படும் என மாணிக்கம்தாகூர் எம்.பி. கூறினார்.

நிற்பது இல்லை

விருதுநகர் எம்.பி. மாணிக்கம்தாகூர் சிவகாசியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது, மோடி அரசு தொடர்ந்து தென் தமிழகத்தை புறக்கணித்து வருகிறது. முன்னேற துடிக்கும் மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டம் இருந்த போதும் இங்குள்ள பட்டாசு, தீப்பெட்டி தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக பட்டாசு தொழில் பெரும் பாதிப்பு அடைந்துள்ளது. மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட சிவகாசியில் சென்னையில் இருந்து கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நிற்பது இல்லை.

இதுகுறித்து பலமுறை ரெயில்வேத்துறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை. இந்தநிலையில் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலை சிவகாசியில் நின்று செல்ல வலியுறுத்தி அடுத்த கட்ட போராட்டங்கள் நடத்தப்பட உள்ளது.

ரெயில் மறியல்

இதற்கான போராட்டக்குழு தொடங்கப்பட்டுள்ளது. இதில் தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலைச்சிறுத்தைகள், பார்வர்டு பிளாக், சிவகாசி வர்த்தக சங்கம், திருத்தங்கல் வர்த்தக சங்கம், சிவகாசி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம், வரி செலுத்துவோர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் இடம் பெற்று உள்ளனர். போராட்டக்குழுவின் முடிவின்படி வருகிற 22-ந்தேதி மாலை 5 மணிக்கு கொல்லத்தில் இருந்து சென்னை நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலை எனது தலைமையில் மறிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் மதுரை எம்.பி, வெங்கடேசன், தென்காசி எம்.பி. தனுஷ்குமார், ராமநாதபுரம் எம்.பி. நவாஷ்கனி, சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது தி.மு.க. மாநகர செயலாளர் உதயசூரியன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜாசொக்கர், மாநகர தலைவர் சேர்மத்துரை, ம.தி.மு.க. கவுன்சிலர் ராஜேஷ், விடுதலைச்சிறுத்தைகள் பாண்டி, கம்யூனிஸ்டு சுரேஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story