ஒப்பந்த மின் தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம்
வேலூரில் ஒப்பந்த மின் தொழிலாளர்கள்மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் (சி.ஐ.டி.யு.) வேலூர் வட்டக்கிளையின் சார்பில் வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு கிளை தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெகன், பொருளாளர் சின்னதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பரசுராமன், மாவட்ட தலைவர் முரளி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதில், ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலியாக உள்ள கள உதவியாளர் பணியிடங்களில் ஒப்பந்த ஊழியர்களை தினக்கூலி அடிப்படையில் நியமித்து நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அவர்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்தனர். இந்த போராட்டத்தில் நிர்வாகிகள், ஒப்பந்த மின் தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.