வருகிற 30-ந்தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் - முத்தரசன்
வருகிற 30-ந்தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டத்தில் பங்கேற்குமாறு முத்தரசன் அறிக்கையில் கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பா.ஜ.க. அரசு விலைவாசி நிலவரத்தை கட்டுப்படுத்துவதில் படுதோல்வி அடைந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவில் அனைத்து அத்தியாவசியப் பண்டங்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன. இலவச மின்சாரம் உள்பட மின் கட்டண மானியங்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து, அவைகளை கைவிட வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு வீட்டு வரி, சொத்துவரி, மின் கட்டணங்கள் போன்றவற்றை உயர்த்துவதை மறுபரிசீலனை செய்து, வரி உயர்வுகளை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியும் வரும் 30-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என திருப்பூரில் நடைபெற்ற கட்சியின் மாநில 25-வது மாநாடு தீர்மானித்துள்ளது. அனைத்து தரப்பினரும் மறியல் போராட்டத்தில் பங்கேற்குமாறும் நியாயமான போராட்டத்திற்கு பொதுமக்கள் அனைவரும் தங்களின் பேராதரவை அளித்திடுமாறும் மாநில மாநாடு கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.