ஆனைக்குட்டம் அணை மதகுகளை சரிசெய்யாவிட்டால் போராட்டம்


ஆனைக்குட்டம் அணை மதகுகளை சரிசெய்யாவிட்டால் போராட்டம்
x

ஆனைக்குட்டம் அணையின் மதகுகளை சரி செய்யாவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என சீமான் கூறினார்.

விருதுநகர்

சிவகாசி,

ஆனைக்குட்டம் அணையின் மதகுகளை சரி செய்யாவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என சீமான் கூறினார்.

குடிநீர் வினியோகம்

சிவகாசியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

விருதுநகர் நகருக்கு குடிநீர் வினியோகம் செய்து வரும் ஆனைக்குட்டம் அணையின் மதகுகள் தவறான முறையில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த அணையை ரூ.5 கோடியில் கட்டிவிட்டு, அதற்கு பராமரிப்பு செல வாக ரூ.4½ கோடி செலவு செய்து இருக்கிறார்கள். மதகுகளை மாற்றி அமைக்க தேவையான நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும்.

அணையையொட்டி உள்ள பாதையை அதிகாரிகள் மூடிவிட்டனர். இதனால் அந்த பகுதி விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். அந்த பாதையை திறந்துவிட வேண்டும்.

போராட்டம்

அணையின் மதகுகள் சரியில்லாததால் 4,500 ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. 1 லட்சம் மக்களுக்கான குடிநீர் ஆதாரம் பாழாகிறது. மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசும், அதிகாரிகளும் முன்வர வேண்டும். இல்லை என்றால் நாம்தமிழர் கட்சி மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்.

பாராளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ளதால் தான் தமிழகத்தில் மத்திய அமைச்சர்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. இனி வரும் காலத்தில் அவர்கள் இங்கேயே வீடு எடுத்து தங்கிவிடுவார்கள். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க கூடாது. மக்களிடம் எழுச்சி ஏற்பட வேண்டும்.

தனித்து போட்டி

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது வலுவான எதிர்கட்சி கூட்டணி அமைய வாய்ப்பு இருந்தது. ஆனால் ஒரு சிலரால் அந்த கூட்டணி சிதைந்துவிட்டது.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நாம்தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகளை மூடபோவதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால் அப்படி எதுவும் நடக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

பொதுக்கூட்டம்

விருதுநகர் தேசபந்து திடலில் நேற்று இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கிராமங்கள் வெறிச்சோடி விட்டன. நகர்ப்புறங்களில் தான் கல்வி, வேலை வாய்ப்பு தொழில் உள்ளது என நகர்புறங்களை தேடி வரும் நிலை ஏற்பட்டது. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் தலை சிறந்த ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

குழந்தைகள் எதில் ஆர்வம் இருக்கிறதோ அதில் அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். சிங்கப்பூர் குட்டி நாடாக இருந்தாலும் அங்கு உலகத்தரம் வாய்ந்த கல்வி வழங்கப்படுகிறது. ஜமைக்கா நாட்டை ேசர்ந்த உசேன் போல்ட் உலகில் தலை சிறந்த ஓட்டப்பந்தய வீரனாக உள்ளார். 130 கோடி மக்கள் உள்ள நமது நாட்டில் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

வேலைவாய்ப்பில் முன்னுரிமை

தாய்மொழியில் கல்வி பயிற்றுவிக்க வேண்டும். தமிழகத்தில் தமிழில் பெயர்ப்பலகை இல்லை. உலகத்தரம் வாய்ந்த கல்வி வழங்க, தமிழ் மொழி சிறக்க, தமிழ் வாழ நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும். அதற்கு ஆதரவு அளிக்க வேண்டும். அரசு பள்ளி, கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story