விலைவாசி உயர்வை கண்டித்து கவர்னர் மாளிகை அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்


விலைவாசி உயர்வை கண்டித்து கவர்னர் மாளிகை அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்
x

விலைவாசி உயர்வை கண்டித்து கவர்னர் மாளிகை அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 50-க்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

வேலைவாய்ப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து சென்னை, கிண்டி கவர்னர் மாளிகை அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று போராட்டம் நடந்தது. போராட்டத்தின்போது, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை குறிக்கும் வகையில் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை தோரணமாக கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மாநில துணைத்தலைவர் நா.பெரியசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்கு விரோதமாகவும், ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் விரோதமாகவும் மத்திய அரசு செயல்படுகிறது. நாடாளுமன்றத்தேர்தலில் பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என கடந்த 3 நாட்களாக தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக பா.ஜ.க. ஊழல் நடவடிக்கையை மறைத்து சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் மக்களைப் பிரித்து பேசி வருகின்றது. ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம் என்ற பெயரில் கூட்டாட்சி கோட்பாடுகளை தகர்த்து வருகிறது.

வெட்கக்கேடு

பன்னாட்டு நிறுவனங்களின் லாபத்திற்காக பொதுத்துறை நிறுவனங்களையும், இயற்கை வளங்களையும் அழித்து வருகிறது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் இதுபோன்ற போராட்டங்கள் நடத்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.

சிலிண்டர் விலையை ஆயிரம் ரூபாய் ஏற்றி விட்டு தற்பொழுது ரூ.200 குறைத்திருக்கும் செயல் நாட்டு மக்களை இழிவுபடுத்துவதாக இருக்கிறது. ஜி-20 மாநாட்டிற்காக பல தலைவர்கள் இந்தியா வருகை தந்த நேரத்தில் போர்வைகள் போட்டு ஏழைகள் வாழும் பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி மறைத்துள்ளார். இது வெட்கக்கேடாக இருக்கின்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

50 பேர் கைது

இதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது, 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.


Next Story