கிராம கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வருவதற்கு எதிர்ப்பு: மாதவரம் - மணலி சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்
கிராம கோவிலை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை அடுத்த மாதவரம் பால்பண்ணை அருகே உள்ள மஞ்சம்பாக்கம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு கிராம தேவதையாக உள்ள எல்லையம்மன் கோவிலில் ஏழு தலைமுறைகளாக பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். இங்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 2001-ம் ஆண்டு கோவி சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த கோவில் தற்போது இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் பரவியது. இதனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கோவில் அருகே 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர் அவர்கள், சாலை மறியலில் ஈடுபடுவதற்காக மாதவரம் மணலி சாலைக்கு வந்தபோது, போலீசார் தடுத்து நிறுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைத்து பேசுவதாக உறுதியளித்தனர். இது குறித்து தகவலறிந்த இந்து அறநிலையத்துறை சேர்ந்த செயல் அலுவலர் நித்தியகலா, கோவில் தக்கார் சண்முகம், இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் சம்பத் ஆகியோர் கோவிலுக்கு விரைந்து வந்து, கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், அதிருப்தியடைந்த பொதுமக்கள் கோவில் அருகே உள்ள மாதவரம்-மணலி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையறிந்த மாதவரம் பால் பண்ணை இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் சமாதானமடைந்த பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் மாதவரம்-மணலி சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக அங்கு பதட்டமான சூழ்நிலை உருவானதால், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகிகள் இந்து அறநிலைத்துறை உயர்அதிகாரிகளை சந்தித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதையொட்டி, கோவில் அருகே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது.