எடப்பாடியில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு;பொதுமக்கள் சாலை மறியல்


எடப்பாடியில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு;பொதுமக்கள் சாலை மறியல்
x

எடப்பாடியில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேலம்

எடப்பாடி:

டாஸ்மாக் மதுக்கடை

எடப்பாடி நெசவாளர் காலனி பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் எடப்பாடி- பூலாம்பட்டி பிரதான சாலையில் அமைந்துள்ள அரசு மதுக்கடையை அங்கிருந்து நெசவாளர் காலனி அருகே மாற்ற டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதையறிந்த நெசவாளர் காலனி குடியிருப்பு பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி- நெடுங்குளம் பிரதான சாலையில் நேற்று திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு எடப்பாடி போலீசார் விரைந்து வந்தனர். தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உறுதி

இது குறித்து எடப்பாடி தாசில்தாரிடம் நேரில் சந்தித்து புகார் மனு அளித்திட வேண்டும் என அறிவுறுத்தினர். இதையடுத்து எடப்பாடி தாசில்தார் அலுவலகத்திற்கு பொதுமக்கள் சென்று தாசில்தார் லெனினை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், எடப்பாடி நெசவாளர் காலனி பகுதியில் அரசு மது கடை அமைக்கக்கூடாது. குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் மதுக்கடை அமையும் பட்சத்தில் இங்குள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. அங்கு அமைய உள்ள டாஸ்மாக் மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார், சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பேசி தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார்.

இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story