திருவள்ளூர் அருகே கோவில் வளாகத்தில் கிராம சபை கூட்டம் நடத்த எதிர்ப்பு


திருவள்ளூர் அருகே கோவில் வளாகத்தில் கிராம சபை கூட்டம் நடத்த எதிர்ப்பு
x

திருவள்ளூர் அருகே கோவில் வளாகத்தில் கிராம சபை கூட்டம் நடத்த இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருவள்ளூர்

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் நரசிங்கபுரம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி மோகனசுந்தரம் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பால சுப்பிரமணி, பற்றாளர் சந்திரா, வருவாய் ஆய்வாளர் கவிதா, வேளாண்மை உதவி அலுவலர் பாரதி, வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கி ஊராட்சியில் வரவு செலவு கணக்கு மற்றும் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்திற்கு வந்திருந்த இளைஞர்கள் கோவில் வளாகத்தில் கிராம சபை கூட்டத்தை நடத்த கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் அரசுக்கு சொந்தமான இடத்தில் கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்து தங்கள் கையில் பதாகைகளை ஏந்தி கோவில் வளாகத்தில் கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில், மப்பேடு இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் அரசு அதிகாரிகள் இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இனிவரும் காலங்களில் அரசுக்கு சொந்தமான கட்டிடங்களில் கிராம சபை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


Next Story