கடையம் அருகே ஊர் பெயரை மாற்ற எதிர்ப்பு: கிராம மக்கள் போராட்டம்


கடையம் அருகே ஊர் பெயரை மாற்ற எதிர்ப்பு: கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 22 Aug 2023 12:15 AM IST (Updated: 22 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே ஊர் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி

கடையம்:

கடையம் அருகே உள்ள கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்றத்துக்கு உட்பட்டது மேட்டூர் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், மேட்டூர் கிராமத்தின் ஊர் பெயரை மாற்றுவதற்கு முயற்சி நடப்பதாகவும், அதை கைவிடக்கோரியும் இப்பகுதி மக்கள் சில மாதங்களுக்கு முன்பு மயானத்தில் குடியேறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே, நடைபெற உள்ள கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற கூட்டத்தில் ஊர் பெயரை மாற்றுவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, அந்த தீர்மானத்தை நிறைவேற்றக்கூடாது என்று வலியுறுத்தி, பரிசுத்த திரித்துவ ஆலயம் முன்பு கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் தொடர்பாக அங்கு வைக்கப்பட்ட பேனரை போலீசார் அப்புறப்படுத்தினர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊர் பெயர் மாற்றம் தொடர்பாக ஊராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கூடாது. அவ்வாறின்றி தீர்மானம் நிைறவேற்றப்பட்டால், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ரேஷன் கார்டு, ஆதார் கார்டுகளை திரும்ப ஒப்படைக்கும் போராட்டம் நடத்த இருப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனர். மேலும் கோரிக்கையை வலியுறுத்தி சிலர் மட்டும் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று மனுவும் கொடுத்தனர்.


Next Story