தூத்துக்குடி-கோவில்பட்டியில் பா.ஜனதாவை கண்டித்து போராட்டம்; காங்கிரசார் கைது


தூத்துக்குடி-கோவில்பட்டியில் பா.ஜனதாவை கண்டித்து போராட்டம்; காங்கிரசார் கைது
x
தினத்தந்தி 7 Oct 2023 12:15 AM IST (Updated: 7 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி, கோவில்பட்டியில் பா.ஜனதாவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி.யை பத்து தலை ராவணன் என்று விமர்சித்துள்ள பா.ஜனதாவை கண்டித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நேற்று எட்டயபுரம் ரோட்டில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த முயன்றனர். இதனால் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் காங்கிரசார் பாளையங்கோட்டை ரோடு கே.டி.சி.நகர் பகுதியில் திரண்டனர். அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது, அங்கு பா.ஜனதா கட்சியினர் வந்தனர். அவர்களும் திடீரென காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பா.ஜனதா கட்சியினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார் 16 பேரை கைது செய்தனர்.

இதேபோல் கோவில்பட்டி காந்தி மண்டபம் முன்பிருந்து மந்தித்தோப்பு ரோட்டில் உள்ள பா.ஜனதா மாவட்ட தலைவர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக நகர காங்கிரஸ் தலைவர் அருண் பாண்டியன் தலைமையில் கட்சியினர் நேற்று மாலையில் புறப்பட்டனர். அவர்கள் 13 பேரை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.


Related Tags :
Next Story