தடையை மீறி போராட்டம்: எடப்பாடி பழனிசாமி - அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக தடையை மீறி போராட்டம் நடத்திய எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை,
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம் சட்டசபை கூட்டம் தொடங்கியதும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச முயன்றார். ஆனால் சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை. அவருக்கு தொடர்ந்து அனுமதி கொடுக்க வேண்டும் என்று கூறி அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்கள் அனைவரையும் சபாநாயகர் உத்தரவின் பேரில், அவைக்காவலர்கள் கூண்டோடு வெளியேற்றம் செய்தனர்.
இதனை கண்டித்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்கள் பங்கேற்கும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்க மறுத்துவிட்டனர்.
தர்ணா
இருப்பினும் திட்டமிட்டபடி, உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்கள் நேற்று காலையிலேயே கூடினர். அதற்கேற்றாற்போல், போலீசாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட இடத்தில் ஆங்காங்கே தடுப்பு வேலியையும் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
போராட்டம் நடைபெற இருந்த இடத்துக்கு எடப்பாடி பழனிசாமி காலை 9 மணிக்கு வந்தார். அனுமதி இல்லை என்றாலும், அந்த இடத்தில் தரையில் அமர்ந்து எடப்பாடி பழனிசாமி தடையை மீறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவருடன் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், காமராஜ், ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், இலக்கிய அணி துணைச்செயலாளர் இ.சி.சேகர், சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச்செயலாளர் எம்.ஏ.சேவியர் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கூடியிருந்தனர்.
எடப்பாடி பழனிசாமி கைது
அப்போது போலீசார் எடப்பாடி பழனிசாமியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதோடு, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் 'நீதி வேண்டும்... நீதி வேண்டும்... சட்டமன்றத்தில் நீதி வேண்டும்..., செத்துவிட்டது... செத்துவிட்டது... ஜனநாயகம் செத்துவிட்டது...' என்பது உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள்.
இதையடுத்து போலீசார் தரையில் அமர்ந்திருந்த எடப்பாடி பழனிசாமியின் கையை பிடித்து தூக்க முயன்றனர். ஆனால் நிர்வாகிகள் போலீசாரை தடுத்து நிறுத்தியதோடு, வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால் சிறிதுநேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் போலீசார் அதிக அளவில் உள்ளே வந்து, எடப்பாடி பழனிசாமி உள்பட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்களை கைது செய்து பஸ்சில் ஏற்றி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்துக்கு அழைத்து சென்றனர்.
ஆத்திரம் அடைந்த எடப்பாடி பழனிசாமி
ராஜரத்தினம் மைதானத்திலேயே எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர். அப்போது நிருபர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். அதனை போலீசார் தடுத்ததாக கூறப்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர் ஆவேசத்துடன் எழுந்து போலீசாரை பார்த்து, "இருங்க... நிருபர்கள் கேள்வி கேட்டுக்கிட்டு இருக்காங்க...' என்று கையை நீட்டியபடி கோபமாக பேசினார். அதையடுத்து அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
உண்ணாவிரத போராட்டம் என்பதால், போலீசார் கொடுத்த உணவு, தண்ணீர் எதையும் அ.தி.மு.க.வினர் வாங்கி சாப்பிடவில்லை என்ற தகவல்களும் வெளியாகின. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இளைப்பாறுவதற்காக ராஜரத்தினம் மைதான வளாகத்தில் சொகுசு வாகனமும் (கேரவன்) அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இதனையடுத்து மாலையில் பழச்சாறு அருந்தி அனைவரும் போராட்டத்தை முடித்துக்கொண்டனர். பின்னர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
நடுநிலையோடு செயல்படவில்லை
முன்னதாக எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
வேண்டும் என்றே திட்டமிட்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆலோசனைப்படி, சபாநாயகர் செயல்படுகிறார். நடுநிலையோடு செயல்படவில்லை.
ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து பொதுக்குழுவால் நீக்கப்பட்டு விட்டார். அப்படி நீக்கப்பட்டவரை எதிர்க்கட்சி துணைத்தலைவராக எப்படி அறிவிக்க முடியும்.
எனவே இது வேண்டும் என்றே திட்டமிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சபாநாயகரை பயன்படுத்தி எங்களை வெளியேற்றி உள்ளார். கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
எதிர்க்கட்சியை ஒடுக்குகின்ற நிலையில்தான் இன்றைய முதல்-அமைச்சர் செயல்பட்டு கொண்டிருக்கிறார். அ.தி.மு.க.வை முடக்க வேண்டும். பிளக்க வேண்டும். சிதைக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் எண்ணுகிறார். அவருடைய எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.
இவ்வாறு அவர் கூறினார்.
கருப்பு சட்டையில் அ.தி.மு.க.வினர்...
தடையை மீறி நடந்த போராட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான அ.தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டதை பார்க்க முடிந்தது. எடப்பாடி பழனிசாமியும் கருப்பு சட்டைதான் அணிந்து போராட்டத்தில் பங்கு பெற்றார். போராட்டத்தில் வெள்ளை சட்டை அணிந்திருந்தவர்களும் கருப்பு பட்டையை சட்டையில் அணிந்தவாறு பங்கேற்றனர்.