புதுச்சத்திரத்தில் தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


புதுச்சத்திரத்தில்  தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Sept 2022 12:15 AM IST (Updated: 17 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சத்திரத்தில் தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்

புதுச்சத்திரம் அருகே உள்ள களங்காணி ஊராட்சியில் அருந்ததியர் தெருவுக்கு செல்லும் வழியில் பழுதடைந்து இருக்கும் சாலையால் விபத்து ஏற்படும் சூழல் இருந்து வருகிறது. மேலும் குடிநீர் இணைப்புகளுக்காக தோண்டப்பட்ட குழிகளும் வீடுகளுக்கு முன்பு பெரிய அளவில் உள்ளது. எனவே அந்த சாலையை புதுப்பிக்க கோரியும், குடிநீர் குழாய்களை பள்ளத்தில் இருந்து தரை தளத்திற்கு மாற்றுவதோடு, சாக்கடை கால்வாய் அமைத்து தர வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மற்றும் தமிழ்ப்புலிகள் கட்சியினர் சார்பில் ஏற்கனவே கோரிக்கை மனு அளிக்கப்பட்டு இருந்தது.

இதனிடையே அந்த மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து நேற்று புதுச்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் வீரமணி தலைமை தாங்கினார். மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர்கள் குமரவேல், கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவரணி செயலாளர் பிரபு வள்ளுவன் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி தலைவரை பணிநீக்கம் செய்ய கோரியும், சாலையை புதுப்பிக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அலுவலக நுழைவாயிலில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து புதுச்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் தனம் மற்றும் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதன்பேரில் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.


Next Story