நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் அமைப்புசாரா, கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்  அமைப்புசாரா, கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் அமைப்புசாரா, கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு 4 மாத ஓய்வூதியம் வழங்கப்படாததை கண்டித்து நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்து அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

உடல் உழைப்பு தொழிலாளர் நலவாரியத்தில் ஓய்வூதியம் பெரும் வயதானவர்களுக்கு 4 மாதம் ஆகியும் ஓய்வூதியம் வரவில்லை என கூறப்படுகிறது. எனவே இந்த நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் 10-ந் தேதிக்குள் தவறாமல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

விபத்து மரணம், இயற்கை மரணம், திருமணம், மகப்பேறு, கல்வி உதவித்தொகை போன்ற நிகழ்வுகளுக்கு நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் அனைத்திற்கும் உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நாமக்கல் மாவட்ட அனைத்து அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கூட்டமைப்பு செயலாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். கூட்டமைப்பு தலைவர் ராமகிருஷ்ணன், பொருளாளர் செல்வராஜ், சேலம் மண்டல குமரன் விசைத்தறி பொது தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் கலைவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

காலிபணியிடங்கள்

பின்னர் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

கட்டுமான தொழிலாளர்களுக்கு 2 மாத ஓய்வூதியம் நிலுவையில் உள்ளது. அதை உடனடியாக வழங்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்கள் வீடு கட்டும் திட்டத்திற்கு தொடர் புதுப்பித்தல் என்பதை மாற்றி புதுப்பித்தல் செய்து வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்ட ரூ.4 லட்சம் மானியத்தை காலதாமதம் செய்யாமல் வழங்க வேண்டும். நாமக்கல் நலவாரிய அலுவலகத்தில் உள்ள காலிபணியிடங்களுக்கு உடனடியாக அலுவலர்களை நியமித்து, வேலை சுணக்கம் இல்லாமல் நடைபெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.


Next Story