நள்ளிரவில் குடிபோதையில் சாலை மறியல் செய்த பெண்கள் மீது வழக்கு; கைது செய்ய நடவடிக்கை
சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் குடிபோதையில் சாலை மறியல் செய்த பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் நள்ளிரவில் 3 பெண்கள் குடிபோதையில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சுடிதார் அணிந்து 'டிப்-டாப்'பாக காணப்பட்ட அந்த பெண்களை திருவல்லிக்கேணி போலீசார் கடும் போராட்டத்துக்கு பிறகு மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அளவுக்கு அதிகமான மதுபோதையில் இருந்ததால் அவர்களை இரவு முழுவதும் பெண் போலீஸ் பாதுகாப்புடன் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் வைத்து விட்டு மறுநாள் காலை விடுவிக்கப்பட்டனர். அவர்கள் 3 பேரும் திருவல்லிக்கேணியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் வரவேற்பு பெண்களாக பணி செய்துவிட்டு பஸ் ஏற வந்தபோது சம்பள பணத்தில் அளவுக்கு மீறி மது வாங்கி அருந்திவிட்டு வாகனங்களை மறித்து சாலை மறியல் செய்துள்ளனர். அவர்களில் 2 பேர் தரமணி எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர்கள் என்றும் ஒரு பெண் கண்ணகி நகரில் வசிப்பவர் என்றும் தெரிய வந்தது.
உதவி கமிஷனர் பாஸ்கர் மேற்பார்வையில் அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டாலும் முறைப்படி அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் சென்னை போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.