சொத்து - குடிநீர் வரியை குறைக்க நடவடிக்கை
சொத்து வரி மற்றும் குடிநீர் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ராஜபாளையம் நகராட்சி தலைவர் கூறினார்.
ராஜபாளையம்,
சொத்து வரி மற்றும் குடிநீர் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ராஜபாளையம் நகராட்சி தலைவர் கூறினார்.
சாதாரண கூட்டம்
ராஜபாளையம் நகராட்சியின் சாதாரண கூட்டம் குமாரசாமி ராஜா கூட்ட அரங்கில் நகராட்சி தலைவர் பவித்ரா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத்தலைவர் கல்பனா, ஆணையாளர் பார்த்தசாரதி, பொறியாளர் ராமலிங்கம், மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் சோலைமலை கூறியதாவது:- அனைத்து வார்டுகளிலும் சொத்து வரி, குடிநீர் வரி ஆகியவற்றை நகராட்சி நிர்வாகம் அதிகமாக வசூல் செய்வதாக தெரிவித்தார். இதற்கு தி.மு.க. கவுன்சிலர்கள் ஜான் கென்னடி, திருமலைக்குமார் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சொத்து வரி
ஏற்கனவே கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சொத்து வரி சம்பந்தமாக தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளனர். அதன்படி தான் தற்போது வசூல் செய்வதாக கூறினார்கள்.
மேலும் தி.மு.க. கவுன்சிலர் ஷ்யாம் கூறியதாவது:- மன்றத்தில் தற்போது சொத்து வரி, குடிநீர் வரி ஆகியவற்றின் சம்பந்தமாக தீர்மானத்தில் ஏற்றி உள்ளோம். இதற்கு பொதுமக்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என கூறி உள்ளனர். இதற்கு தலைவரிடம் தெரிவித்து கடிதம் மூலம் தமிழக அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தலைவர் பவித்ரா:- சொத்து வரி, குடிநீர் வரி அதிகரித்து உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மன்றக்கூட்டத்தில் இதற்கு தீர்மானம் நிறைவேற்றி தற்போது சொத்து வரியை 19 சதவீதம் என்பதை 15 சதவீதம் ஆக குறைக்க அரசுக்கு கடிதம் மூலம் தெரிவித்த பின்னர் சொத்து வரி, குடிநீர் வரியை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அனைத்து வார்டுகளிலும் வாருகால் பகுதியில் சிறிய பாலங்கள் உடைந்த நிலையில் காணப்படுவதால் அதனையும் சரி செய்யப்படும் என கூறினார்.
உறுதிமொழி
ராஜபாளையம் நகராட்சியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு கொடுஞ்செயல் எதிர்ப்பு தினமாக நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி தலைமையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் நகரமைப்பு அலுவலர் மதியழகன், நகர் நல அலுவலர் சரோஜா, நகராட்சி அலுவலர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.