தமிழ்நாட்டில் முக்கிய தலைவர்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருக்கிறார்கள் - திருமாவளவன்
இனிமேலாவது உளவுத்துறை விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
கொலையான ஆம்ஸ்ட்ராங் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை பெரம்பூர் பந்தர் கார்டன் தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்டு உள்ளது. ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவரும், உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான மாயாவதி இன்று காலை தனி விமானம் மூலம் சென்னை வந்தார்.
பின்னர் சென்னை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் பெரம்பூருக்கு மாயாவதி வந்தடைந்தார். அங்கு படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். முன்னதாக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் கூறினார். அவருடன் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆகாஷ் ஆனந்த் உடனிருந்தார்.
உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் பேசிய மாயாவதி, "தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை மாநில அரசு உடனடியாக சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும். சட்டம் ஒழுங்கை சீர்படுத்த வேண்டும். சட்டம் -ஒழுங்கை பராமரிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தலித்துகளின் வாழ்க்கை ஆபத்தான நிலையில் உள்ளதை இந்த சம்பவம் காட்டுகிறது. தலித் மக்களின் வாழ்க்கை மேம்பட, பாதுகாப்பாக இருக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று கூறினார்.
உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், "எந்த பதவி ஆசையும் இல்லாமல் அம்பேத்கரின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் ஆம்ஸ்ட்ராங். ஆம்ஸ்ட்ராங் படுகொலை கோழைத்தனமானது. தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்காக பாடுபடும் அரசியல் தலைவர்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருக்கிறார்கள்.
தலைவருக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்பது அரசின் கடமை, காவல்துறையின் கடமை. இனிமேலாவது உளவுத்துறை விழிப்புடன் செயல்பட வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நிகழவே கூடாது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பது தான் உண்மை. ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது
ஆம்ஸ்ட்ராங்கை இழந்தது பட்டியலின மக்களுக்கான அரசியலுக்கு நேர்ந்த பேரிழப்பு. பவுத்தம் நமக்கான மாற்று அரசியல் என்பதை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் வலியுறுத்தி வந்தார். ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தேசிய தலைவர்களும் கொலையை கண்டித்துள்ளனர்" என்று அவர் கூறினார்.