திட்டங்கள் மக்களை சென்றடைய ஒத்துழைப்பு தர வேண்டும்


திட்டங்கள் மக்களை சென்றடைய ஒத்துழைப்பு தர வேண்டும்
x
தினத்தந்தி 26 Sept 2023 1:00 AM IST (Updated: 26 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக இருந்து திட்டங்கள் மக்களை சென்றடைய ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அலுவலர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

ஆய்வு கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து துறை சார்பில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. இதற்கு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்து பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் அறிவித்துள்ள நான் முதல்வன், இல்லம் தேடிக் கல்வி போன்ற திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு தரமான சிகிச்சை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

ஒத்துழைப்பு

மகளிர் சுய உதவிக் குழுக்கள் புதியதாக தொடங்கி அவற்றிற்கு வங்கி கடன் வழங்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக அளவில் விளையக் கூடிய காய்கறிகள், மா, பூ உற்பத்திகளை அதிகரிக்கவும், அவற்றை பாதுகாப்பதற்கு குளிர்பதன கிடங்குகளில் உரிய நேரத்தில் விவசாயிகள் விற்று லாபம் பெறுவதற்கும்,

தமிழக அரசு அறிவித்த முத்திரை பதித்த திட்டங்களை தொய்வு இன்றி செயல்படுத்த அரசு அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். அரசுத்துறை அலுவலர்கள் அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக இருந்து அனைத்து நலத்திட்டங்களும் மக்களுக்கு சென்றுசேர முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நலத்திட்ட உதவிகள்

தொடர்ந்து வேளாண்மை மற்றும் உழவர் துறை சார்பில் 50 விவசாயிகளுக்கு ரூ.17 லட்சத்து 84 ஆயிரத்து 44 மதிப்பில் வேளாண்மை இடு பொருட்களையும், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 4 பேருக்கு ரூ.1 கோடி மதிப்பிலான வேளாண்மை எந்திரங்கள், கருவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

மேலும் பல்வேறு துறைகள் சார்பில் மொத்தம் 3,293 பயனாளிகளுக்கு ரூ.41 கோடியே 54 லட்சத்து 41 ஆயிரத்து 516 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

மஞ்சப்பை

மேலும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டுத் துறை சார்பாக, பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடுக்கும் பொருட்டு, மஞ்சப்பை விழிப்புணர்வை தொடங்கி வைத்து பொதுமக்கள் மற்றும் அரசு துறை அலுவலர்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினார்.

தொடர்ந்து, கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 20 அரசு பள்ளிகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 20 கழிப்பறைகள் கட்டுவதற்கு ரூ.40 லட்சத்திற்கான காசோலையை பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மூலம் கலெக்டரிடம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர் சக்கரபாணி, சிறப்பு திட்ட அமலாக்க துறை செயலாளர் தரேஸ் அகமது, கலெக்டர் சரயு, செல்லகுமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மதியழகன், ஒய்.பிரகாஷ், ராமச்சந்திரன், ஓசூர் மேயர் சத்யா, முன்னாள் எம்.எல்.ஏ. முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஆய்வு

முன்னதாக, சூளகிரி ஊராட்சி ஒன்றியம், சென்னப்பள்ளி ஊராட்சியில், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பாக 10 ஏக்கர் பரப்பளவில் ரூ.26 கோடியே 81 லட்சம் மதிப்பில் 5 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட காய்கறி முதன்மை பதப்படுத்தும் கிடங்கு மற்றும் குளிர்பதன கிடங்கு கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கட்டுமான பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்கப்பட்டு விவசாயிகளின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, மருதாண்டப்பள்ளி ஊராட்சியில், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் சார்பாக வருங்கால நகர் திறன் பூங்கா அமைய உள்ள இடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இப்பூங்கா 300 ஏக்கர் பரப்பளவில் ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பில் ரூ.2 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்க்கக் கூடிய வகையில் அமைக்கப்பட உள்ளதாகவும், இதனால் 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story