கிராமங்கள் தன்னிறைவு பெறும் வகையில் திட்டங்களை சமர்ப்பிக்க வேண்டும்


கிராமங்கள் தன்னிறைவு பெறும் வகையில் திட்டங்களை சமர்ப்பிக்க வேண்டும்
x
தினத்தந்தி 28 Jun 2023 11:27 PM IST (Updated: 29 Jun 2023 4:33 PM IST)
t-max-icont-min-icon

கிராமங்கள் தன்னிறைவு பெறும் வகையில் திட்டங்களை சமர்ப்பிக்க வேண்டும்

ராணிப்பேட்டை

திட்டக்குழு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட திட்டக்குழுவின் முதல் கூட்டம் நடந்தது. மாவட்ட ஊராட்சிக் குழு தலைவரும், மாவட்ட திட்டக்குழு தலைவருமான ஜெயந்தி திருமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டரும், திட்டக் குழு துணைத் தலைவருமான வளர்மதி முன்னிலை வகித்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மாவட்ட ஊராட்சி அமைப்புகளுக்கு திட்டம் தயாரித்தல், அனைத்து செயல் திட்டங்களையும் உள்ளடக்கிய ஆண்டு மற்றும் ஐந்தாண்டு திட்டம் தயாரித்தல் இவைகளில் பயிர் உற்பத்தி மற்றும் பாதுகாப்பு, மண்வளம், நீர் வளம் பாதுகாப்பு, கால்நடை பராமரிப்பு, பால்வள மேம்பாடு, மீன்வளம், சமூக காடுகள், கூட்டுறவு துறை, ஊரக வளர்ச்சிக்கான சிறப்பு திட்டங்கள், சமுதாய மேம்பாடு, சிறுபாசனம் போன்ற துறைகளில் திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும்.

தன்னிறைவு பெறும் வகையில்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் தன்னிறைவு அடையும் வகையிலும், மாவட்டம் தன்னிறைவு அடையும் வகையிலும், மக்களின் வாழ்க்கை, பொருளாதாரம் முன்னேற்றம் அடையும் வகையிலும் புதிய செயல் திட்டங்களை உறுப்பினர்கள் ஆராய்ந்து தேவையான திட்ட அறிக்கை, ஏற்கனவே உள்ள சட்ட திட்டத்திற்கு உட்பட்டு செயல்படுத்த முடியும் என்ற நிலையில் உள்ள திட்டங்களாக அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆண்டு வளர்ச்சி திட்டம் கிராம ஊராட்சிகள் செப்டம்பர் 30-ந் தேதிக்குள்ளும், ஊராட்சி ஒன்றியங்கள் அக்டோபர் 31-ந் தேதிக்குள்ளும், மாவட்ட ஊராட்சிகள் நவம்பர் 30-ந் தேதிக்குள்ளும், பேரூராட்சி மற்றும் நகராட்சிகள் நவம்பர் 30-ந் தேதிக்குள்ளும் வழங்கிட வேண்டும். மாவட்ட திட்டக்குழு டிசம்பர் 31-ந் தேதிக்குள் ஒருங்கிணைந்த மாவட்ட வளர்ச்சி திட்டம் தயாரித்து மாநில திட்ட குழுவிற்கும், அரசுக்கும் அனுப்பிட நடவடிக்கைகளை மேற்கொள்ளும். ஆகவே கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்கள் மாவட்டத்திற்கு தேவையான வளர்ச்சி திட்ட அறிக்கையினை துறை அலுவலர்களுடன் இணைந்து வரையறுக்கப்பட்டுள்ள காலத்திற்குள் மாவட்ட திட்ட குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட ஊராட்சிக் குழு செயலாளர் குமார், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் மற்றும் திட்ட குழு உறுப்பினர் நாகராஜு, திட்டக் குழு உறுப்பினர்கள் அம்பிகா பாபு, சுந்தராம்பாள் பெருமாள், சக்தி, செல்வம், மாலதி கணேசன், காந்திமதி பாண்டுரங்கன், சிவக்குமார், காஞ்சனா, தியாகராஜன், பாபி பரஞ்சோதி, ஜபர் அஹமத் மற்றும் உள்ளாட்சி அமைப்பு தலைவர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story