மாமல்லபுரத்தை சர்வதேச தரத்திற்கு அழகுபடுத்தும் வகையில் திட்ட அறிக்கை - நகராட்சி முதன்மை செயலாளர் ஆய்வு
மாமல்லபுரத்தை சர்வதேச தரத்திற்கு அழகுபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கையுடன் கூடிய வரைபடத்தை நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரம் நகரத்தில் 7-ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களால் கல்லில் வடிவமைக்கப்பட்ட கடற்கரை கோவில், ஐந்துரதம் உள்ளிட்ட ஏராளமான புராதன சின்னங்கள் உள்ளன.
இந்நகரை சர்வதேச நாடுகளில் உள்ள சுற்றுலா நகரம் போல் அழகுபடுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றன. மாமல்லபுரத்தை அழகுபடுத்த பேரூராட்சி மன்றம் சார்பில் திட்ட அறிக்கையுடன் கூடிய வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று மாமல்லபுரம் வருகை தந்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் ஷிவ்தாஸ்மீனா கடற்கரை கோவில் உள்ளிட்ட புராதன சின்னங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நகரை அழகுபடுத்த தயாரிக்கப்பட்ட வரைபடம் கொண்டு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ், பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் ஆகியோர் முதன்மை செயலாளரிடம் வரைபடத்தில் உள்ள மாதிரி எந்த வகையில் சுற்றுலா பயணிகளை கவரும் என்பது குறித்து விளக்கினர்.