கல்வி தொலைக்காட்சிக்கு உபகரணங்கள் வாங்கும் டெண்டருக்கு தடை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


கல்வி தொலைக்காட்சிக்கு உபகரணங்கள் வாங்கும் டெண்டருக்கு தடை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

கல்வி தொலைக்காட்சிக்கு உபகரணங்கள் வாங்கும் டெண்டருக்கு மதுரை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.

மதுரை,

தேனி உத்தமபாளையத்தை சேர்ந்த மணிகண்ட பூபதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்காக கல்வி தொலைக்காட்சியை அரசே நடத்தி வருகிறது. இந்த தொலைக்காட்சியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே இதற்கான உபகரணங்களை வாங்குவதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த டெண்டர் அறிவிப்பில் முறையான விதிகள் பின்பற்றப்படவில்லை.

கல்வித் தொலைக்காட்சிக்கு தலைமை தொழில்நுட்ப அதிகாரியை நியமிக்காமல், உபகரணங்கள் கொள்முதல் செய்ய டெண்டர் விடுவது அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும். எனவே தற்போதைய டெண்டர் அறிவிப்புக்கு தடை விதித்து, உரிய அதிகாரிகளை நியமித்து முறையாக டெண்டர் நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், கல்வி தொலைக்காட்சிக்கு உபகரணங்கள் வாங்கும் டெண்டர் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கிறோம். இது குறித்து பள்ளிக் கல்வித்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


Next Story