நங்கநல்லூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்; 30 பா.ஜ.க.வினர் கைது
நங்கநல்லூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட 30 பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த ஆலந்தூர் கண்ணன் காலனியை சேர்ந்தவர் விஜயன் (வயது 32). இவர், சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படையில் 2-ம் நிலை போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். கடந்த 7-ந் தேதி இவரது மைத்துனர் வாசு என்பவரின் நண்பர் அஜ்மல் என்பவரை தாக்கியது தொடர்பாக தட்டிக்கேட்க சென்ற விஜயன், ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், வினோத்குமார் உள்பட 5 பேரை கைது செய்தனர். கைதான வினோத்குமார் தி.மு.க.வை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இந்த வழக்கில் போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்தனர். ஆனால் இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. ஆனால் தடையை மீறி நங்கநங்லூர் சிவன் கோவில் அருகில் சென்னை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. துணைத்தலைவர் பாஸ்கர் தலைமையில் இன்பராஜ், மீனாட்சி ஸ்ரீதர், வினோத், ராஜா உள்பட 30-க்கும் மேற்பட்டோர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பரங்கிமலை போலீஸ் உதவி கமிஷனர் அமீர்அகமது தலைமையிலான போலீசார், தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததாக அனைவரையும் கைது செய்து நங்கநல்லூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.