எருது விடும் விழாவுக்கு தடை


தினத்தந்தி 1 Feb 2023 12:15 AM IST (Updated: 1 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் அருகே ஆவலப்பள்ளியில் உரிய அனுமதி பெறாததால் எருது விடும் விழாவுக்கு போலீசார் தடை விதித்தனர். இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூர் அருகே ஆவலப்பள்ளியில் உரிய அனுமதி பெறாததால் எருது விடும் விழாவுக்கு போலீசார் தடை விதித்தனர். இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

எருது விடும் விழா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் எருது விடும் விழா நடைபெற்று வருகிறது. இதற்கு உரிய அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது. இதனிடையே ஓசூர் அருகே ஆவலப்பள்ளியில் சப்ளம்மா கோவில் விழா மற்றும் பொங்கல் விழாவையொட்டி நேற்று எருது விடும் விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது.

விழாவுக்காக அந்த பகுதியில் உள்ள காலி இடத்தை சீரமைத்து, தடுப்புகள் மற்றும் மேடை உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் விழாக்குழுவினர் செய்திருந்தனர். ஆனால், எருது விடும் விழாவை நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் விழாக்குழுவினர் முறையான அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து எருது விடும் விழாவுக்கு போலீசார் தடை விதித்தனர்.

பொதுமக்கள் ஏமாற்றம்

மேலும் நீதிமன்ற உத்தரவுபடி, விழா நடத்த காப்பீடு செய்த பின்னர் உரிய அனுமதி பெற்று நடத்த வேண்டும் என்பதால், நேற்று நடைபெற இருந்த எருது விடும் விழா, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் விழாவை காண ஆர்வமாக இருந்த பொதுமக்கள், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் அங்கு வந்து ஏமாற்றம் அடைந்தனர். மேலும், ஓசூர் அட்கோ போலீசார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் அங்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story