12½ டன் விதைகள் விற்பனை செய்ய தடை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 12½ டன் விதைகள் விற்பனை செய்ய தடை விதித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 12½ டன் விதைகள் விற்பனை செய்ய தடை விதித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
அதிகாரி ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் கார்த்திகை பட்டத்தில் நெல், நிலக்கடலை, காய்கள் பயிரிட தயாராகி வருகின்றனர். எனவே விதை விற்பனை நிலையங்களில் நல்ல தரமான விதைகள் விற்பனை செய்யப்படுகிறதா? என விதை விற்பனை நிலையங்களில், தர்மபுரி விதை ஆய்வு துணை இயக்குனர் சங்கர் தலைமையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது விவசாயிகளுக்கு உரிய ரசீது வழங்கி விற்பனை செய்யப்படுகிறதா?, கடைகளின் முகப்பில் விலைப்பட்டியல் சரியாக எழுதப்பட்டுள்ளதா?, இருப்பு பதிவேடு முறையாக பராமரிக்கப்படுகிறதா? என அவர்கள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் ரூ.9.90 லட்சம் மதிப்பிலான 12.40 மெட்ரிக் டன் விதைகள் உரிய ஆவணங்கள் இல்லாமல் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
நடவடிக்கை
இதையடுத்து அதிகாரிகள் அந்த விதைகளை விற்பனை செய்ய அதிகாரிகள் தடை விதித்தனர். மேலும் ஆய்வில் 24 விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு விதை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பப்பட்டது. மேலும் நிலக்கடலை மற்றும் அனைத்து விதைகளும் அரசு விதை விற்பனை உரிமம் வழங்கிய விற்பனை நிலையங்களில் மட்டுமே விதைகள் விற்பனை செய்ய வேண்டும்.
உரிமம் இன்றி விதைகள் விற்பனை செய்தால், விதைச் சட்டம் 1966, விதை விதிகள் 1968 மற்றும் விதை கட்டுப்பாட்டு ஆணை 1983 ஆகிய விதை அமலாக்க சட்டங்கள் மூலம் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரகை விடுத்தனர். இந்த ஆய்வில் விதை ஆய்வாளர்கள் தர்மபுரி கார்த்திக், கிருஷ்ணகிரி கண்ணன், ஓசூர் சரவணன், அரூர் சிங்காரவேலன் ஆகியோர் உடன் இருந்தனர்.