ஒகேனக்கல் காவிரி ஆற்றில் புனித நீராட தடை


ஒகேனக்கல் காவிரி ஆற்றில்  புனித நீராட தடை
x

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி இன்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் புனித நீராட தடைவிதித்துள்ளதாக தர்மபுரி கலெக்டர் சாந்தி அறிவித்துள்ளார்.

தர்மபுரி

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி இன்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் புனித நீராட தடைவிதித்துள்ளதாக தர்மபுரி கலெக்டர் சாந்தி அறிவித்துள்ளார்.

ஆடிப்பெருக்கு விழா

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை 5 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,10,000 கனஅடிக்கு மேல் தண்ணீர் வரத்து உள்ளது. இதனால் காவிரி ஆற்றில் மீண்டும் அபாயத்தை எட்டும் அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:-

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் காவிரி ஆற்றில் இறங்கி குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ, படகு சவாரி செய்யவோ, ஆற்றின் குறுக்கே கால்நடைகளை அழைத்து செல்லவோ கூடாது என்று ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ள நிலையில் இன்று (புதன்கிழமை) ஆடிப்பெருக்கு விழாவையொட்டி தர்மபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புனித நீராட தடை

இந்த நிலையில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பொதுமக்கள், புதுமண தம்பதிகள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட அனைவரும் சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு வருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் ஊட்டமலை, ஒகேனக்கல் உள்ளிட்ட காவிரி ஆறு, ஒகேனக்கல் சுற்றுலா தலங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் ஆற்றில் புனித நீராடவும், குளிக்கவும், துணி துவைக்கவும் தடை விதிக்கப்படுகிறது. இதை மீறுபவர்கள் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகமாக வந்து கொண்டிருப்பதை முன்னிட்டு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story